
பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி வீராணம் ஏரிக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்!
காட்டுமன்னார்கோவில் திருச்சின்னபுரம் கிராமத்தின் அருகே வீராணம் ஏரிக்குள் நின்று, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து...

வீராணம் ஏரிக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம் - DNS
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உள்ள வீராணம் ஏரிக்கரையில் உள்ள திருச்சின்னபுரம் கிராமத்தின் அருகே வீராணம் ஏரிக்குள் நின்று கொண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்க தலைவர் பி. விநாயகமூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை (அக். 5) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் பகுதி காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாகும். மேட்டூரில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து கீழணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படவில்லை.
விவசாய சங்கங்கள் கடுமையாக போராடியதன் விளைவாக கூடுதல் தண்ணீர் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகிய நீர் நிலைகளில் திறக்கப்பட்டது.
ஆனால், பாசனத்திற்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. சென்னைக்கு மட்டுமே குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் விவசாய சங்கங்கள் அறிவித்தன.
திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை, சென்னையில் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இதனை அடுத்து வீராணம் ஏரியில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் பி. விநாயகமூர்த்தி தலைமையில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இதுபற்றி விவசாய சங்க தலைவர் பி. விநாயகமூர்த்தி கூறியதாவது:
''வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும். மகாராஷ்டிரத்தில் அறிவித்தது போன்று வறட்சி நிவாரணம் ஏக்கருக்கு ரூ. 30,000 அளிக்க வேண்டும்.
கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக உடனடியாக கனரக இயந்திரங்களை வைத்து தூர்வார வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை செவிசாய்க்காமல் இருக்கும் சிதம்பரம் செயற்பொறியாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்'' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
தகவல் அறிந்த சேத்தியத்தோப்பு டிஎஸ்பி ராமலிங்கம், ஆய்வாளர் பாபு, வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் காட்டுமன்னார்கோயில் தனியார் திருமண மண்டபத்தில் கோட்டாட்சியர் மற்றும் சிதம்பரம் செயற்பொறியாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Farmers stage a protest by stepping into the Veeranam Lake, demanding the release of water for irrigation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






