‘மக்கள் நலன்களுக்காக எங்கள் பயணம் தொடரும்’ - பெ. சண்முகம்
மக்கள் நலன்களுக்காக எங்கள் பயணம் தொடரும் என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம். - கோப்புப் படம்
மக்கள் நலன்களுக்காக எங்கள் பயணம் தொடரும் என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பெ. சண்முகம் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளவர்களுக்கு நன்றி.
கம்யூனிஸ்டுகளுக்கு தேர்தல் களம் என்பதும் மக்களுக்கான போராட்ட களத்தின் ஒரு அங்கமே. சமூக மாற்றத்தை இலக்காக கொண்டவர்கள் என்பதால் நீண்ட நெடிய பயணத்தின் ஒரு பகுதியாகவே தேர்தல்களை கருதுபவர்கள். மக்களிடம் சென்று மாற்று அரசியல் பற்றிய உரையாடலை நிகழ்த்தினோம். பணபலம், அதிகார பலம் எதுவுமின்றி களம் கண்டோம்.
அடித்தள உழைப்பாளி மக்களின் நலன்களை கேள்வியாக்கி வருகிற நவ தாராளமயம், இந்தியா முழுவதும் பரப்பப்படும் வெறுப்பு அரசியல், ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தெல்லாம் இடதுசாரிக் கட்சிகளின் கருத்துக்களை எடுத்துரைத்தோம். மக்களை நேசிக்கும் சித்தாந்த பிடிப்பு கொண்டவர்களுக்கு மக்களை சந்திக்கிற ஒவ்வொரு வாய்ப்பும் மகிழ்வை தருவதுதான் என்பதால் நிறைய புதிய தொடர்புகளை எங்களால் ஏற்படுத்த முடிந்துள்ளது.
எங்கள் கட்சியின் முன்னணி ஊழியர்களும், இடதுசாரிக் கட்சிகளின் தோழர்களும் - குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் - இணைந்து அயராத பணியை தேர்தல் களத்தில் மேற்கொண்டனர். அவர்களின் உழைப்பிற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் மக்களிடம் நெருங்குவதும், மக்கள் எங்களை நெருங்குவதும் காலம் விதித்துள்ள கடப்பாடு என்ற நம்பிக்கையோடு தேர்தல் களத்திலிருந்து திரும்பியுள்ளோம்.
எங்கள் பணி நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மட்டுமல்ல, வீதிகளில் தொடரும். தொழிலாளர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு வணிகர்கள், சிறு தொழில் புரிவோர், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நலன்களுக்காக எங்கள் பயணம் தொடரும். நம்பிக்கையோடு மக்கள் பணிக்கு எங்களை எதிர்காலத்திலும் அர்ப்பணித்துக் கொள்வோம்.
மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பா. சுகந்திக்கும், தாராபுரம் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணனுக்கும் வாக்களித்த அனைவருக்கும், தேர்தல் களத்தில் அயராது பாடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேசன் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரித்தாக்கிக் கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
CPI(M) State Secretary P. Shanmugam has stated that their journey for the welfare of the people will continue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

