முன்னாள் அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
செம்மண் முறைகேடு தொடா்பாக, முன்னாள் அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி - கோப்புப் படம்
செம்மண் முறைகேடு தொடா்பாக, முன்னாள் அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையான திமுக ஆட்சியில் உயா்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத் துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தாா். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
முன்னாள் அமைச்சா் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினா் ராஜமகேந்திரன் உள்ளிட்டோா் மீதான இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தீா்ப்பளித்தது.
முன்னதாக, செம்மண் முறைகேடு தொடா்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவா்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, முன்னாள்அமைச்சா் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், மூல வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதால், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை தொடா்ந்து விசாரிக்க முடியாது. எனவே, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூல வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பொன்முடி உள்ளிட்டோா் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், அமலாக்கத் துறை வழக்கை தொடர அனுமதிக்க முடியாது எனக் கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

