ஆடு மேய்க்கும் தொழிலாளியின் வீட்டுக்கு ரூ. 10,451 மின் கட்டணமா? மின்வாரியம் விளக்கம்!
ஆடு மேய்க்கும் தொழிலாளியின் வீட்டுக்கு ரூ. 10,451 மின் கட்டணம் விதிக்கப்பட்டது குறித்து...

ராஜேந்திரன் - படம் - எக்ஸ்
ஆடு மேய்க்கும் தொழிலாளியின் வீட்டுக்கு ரூ. 10,451 மின் கட்டணம் விதிக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் புதன்கிழமை (அக். 14) விளக்கம் அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான ராஜேந்திரனுக்கு ரூ. 10,251 மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து புகார் செய்தும் மின் கட்டணத்தை செலுத்தக் கோரியதால், மின் கட்டணம் செலுத்த இயலாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், மின்சாரக் கட்டணம் தற்போதுதான் சரியாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் மின் அளவி கணக்கீட்டில் தவறு நடந்துள்ளதாகவும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மின்சார வாரியம் அளித்த விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
திருவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ராஜேந்திரன் த/பெ பிச்சை என்பவரது வீட்டு மின் இணைப்பு எண்: 07268001199-ல் கடந்த 07/2026 ம் மாதம் ரூ. 700 மின் கட்டணம் வந்ததை தொடர்ந்து மின் வாரிய அலுவலர்களால் 31/07/2026 மற்றும் 02/08/2026 ஆகிய தினங்களில் மின் அளவி ஆய்வு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆய்வில் மின் அளவி நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மீண்டும் 2026 செப்டம்பர் மாத மின் கட்டணம் ரூ. 10,451 ஆக பதிவு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து 02/09/2026 அன்று மீண்டும் கள ஆய்வு செய்யப்பட்டது. கள ஆய்வில், ராஜேந்திரன் வீட்டில் ஏர் கூலர் (Air Cooler) உபயோகத்தில் இருந்ததாலும், கடந்த 09/2024 மற்றும் 11/2024 ஆகிய காலகட்டங்களிலும் இதே அளவு பயன்பாடு இருந்துள்ளது.
இது குறித்து ராஜேந்திரனிடம் எடுத்துரைத்த போது அதனை ஏற்றுக்கொண்டு தான் 10 தினங்களில் மின் கட்டணம் செலுத்தி விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், மின்கட்டணத்தை உரிய காலத்திற்குள் செலுத்தாததால் 24/9/2026 அன்று மின் துண்டிப்பு செய்யப்பட்டது என்ற விவரம் பணிந்து சமர்பிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மின் அளவியின் தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், கணக்கீட்டாளர் கடந்த 12 மாதங்களாக மின் அளவை குறைத்து தவறாக பதிவு செய்ததன் காரணமாகவும், சிறப்பு ஆய்வில் சரியான மின் அளவு பதிவு செய்யப்பட்டதன் காரணமாகவும், 2026 செப்டம்பர் மாதத்தில் ரூ. 10,451 மின் கட்டணம் கணக்கீடாகியுள்ளது என்ற விவரம் பணிந்து சமர்பிக்கப்படுகிறது.
எனவே, மின் அளவி ஆய்வாக அறிக்கையின் (CMRI தரவிறக்கம்) அடிப்படையில், மின் கட்டணம் திருத்தப்பட்டு தற்போது நிலுவைத்தொகையாக ரூ. 4,054 கணக்கிடப்பட்டுள்ளது. தவறு செய்த மின் கணக்கீட்டாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரமும் பணிந்து சமர்பிக்கப்படுகிறது.
மேலும், ராஜேந்திரன் திருத்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தியதை தொடர்ந்து, இன்று மறு மின் இணைப்பு வழங்கப்பட்டது என்ற விபரமும் பணிந்து சமர்பிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் அறிக்கை

Summary
The Tamil Nadu Electricity Board issued a clarification on Wednesday (Oct. 14) regarding the electricity bill of ₹10,451 charged to the home of a shepherd.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


