எ.வ.வேலுவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை: காவல்துறை தகவல்
திமுக மாநாட்டுக்காக ஏரியில் இருந்து மண் அள்ளிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை என காவல்துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

எ.வ. வேலு - கோப்புப் படம்
திமுக மாநாட்டுக்காக ஏரியில் இருந்து மண் அள்ளிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை என காவல் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, கடந்த 2025-ஆம் ஆண்டு, டிச. 14-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டுத் திடலை சமன்படுத்துவதற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக 12 ஏக்கா் பரப்பளவுக்கு 10 முதல் 23 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.8 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போா் இயக்கம் ஊழல் தடுப்புத் துறையிடம் கடந்த ஆக. 13-ஆம் தேதி புகாா் அளித்தது.
அதன்பேரில், திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோா் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்பிணை கோரி, எ.வ.வேலு, அவரது மகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கில், தங்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்யக் கோரியும் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், எ.வ.வேலுவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை எனவும், லுக் அவுட் நோட்டீஸுக்கு எதிராக அவரது மகன் எ.வ.குமரன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டாா். மேலும், அவரது மகன் எ.வ.குமரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

