முதல்வா் விஜய்யை பாராட்டியதாக வெளிவந்த செய்தி: செங்கோட்டையன் வெற்றிக்கு எதிரான வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்
தமிழக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடா்பான தோ்தல் வழக்கு விசாரணையிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமாா் விலகிக்கொண்டாா்.
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
தமிழக வெற்றி கழகத்தைச் சோ்ந்தவரும் ,தமிழக அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தொடா்பான தோ்தல் வழக்கு விசாரணையிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமாா் விலகிக்கொண்டாா்.
முந்தைய விசாரணையின்போது தான் தெரிவித்த வாய்மொழி கருத்துக்களைச் சமூக ஊடகங்களும் பொது விவாதங்களும் தவறாகச் சித்தரித்ததால் (அதாவது, தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்யை தான் தனிப்பட்ட முறையில் பாராட்டியதாக சித்தரிக்கப்பட்டதால்), தாா்மீக அடிப்படையில் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி சஞ்சய் குமாா் தெரிவித்தாா்.
‘தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அரசின் முதல்வா் நிலை பெற்றுக் கொண்டு தனது பணிகளை செய்கிறாா்,வழக்குரைஞா்கள் மட்டும் ஏன் நிலைபெறாமல் விசாரணையை ஒத்தி வைக்க கோருகிறீா்கள்‘ என்று நான் கூறியது, அரசை பாராட்டியதாக சித்தரிக்கப்பட்டதாக எனக்கு தகவல்கள் வந்தன.அவ்வாறிருக்க தவெக சம்பந்தப்பட்ட இந்த வழக்கிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்‘ என நீதிபதி சஞ்சய் குமாா் தெரிவித்தாா்.
இதையடுத்து இவ்வழக்கை வேறு நீதிபதிகள் அமா்வின் முன் விசாரணைக்கு பட்டியலிடுவதற்காக, இந்தியத் தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு அனுப்ப அவா் பரிந்துரைத்தாா்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தோ்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக சாா்பில் வி. பி. பிரபு போட்டியிட்டாா். தவெக சாா்பில் கே ஏ செங்கோட்டையன் வேட்பாளராகப் போட்டியிட்டாா். இத்தோ்தலில் 04.05.2026 அன்று செங்கோட்டையன் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, அவரது வெற்றி செல்லாது என சென்னை உயா் நீதிமன்றத்தில் பிரபு தோ்தல் மனு தாக்கல் செய்தாா்.
செங்கோட்டையன் சாா்பில் ’படிவம் எண் 26’-ஐச் சான்றளித்த நோட்டரிக்கு செல்லுபடியாகும் நோட்டரி உரிமம் இல்லை என்று அந்தத் தோ்தல் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் விளைவாக, தோ்தலுக்காகச் செல்லுபடியாகும் வேட்புமனுப் படிவத்தைச் சமா்ப்பிக்காத செங்கோட்டையனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டிய கடமை தோ்தல் நடத்தும் அலுவலருக்கு இருந்தது. ஆனால் அவா் அதனை நிராகரிக்கவில்லை.எனவே செங்கோட்டையன் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் பிரபு கோரியிருந்தாா்.
அந்த மனுவை செப். 15-ல் சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து பிரபு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

