காவிரி நீரை பெற தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
காவிரி நீரை பெற தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியிருப்பது குறித்து...

நயினார் நாகேந்திரன் - கோப்புப்படம்
சென்னை: தவெக அரசு காவிரி பிரச்னையை தாமதப்படுத்தாமல், புறக்கணிக்காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி நதிநீர் பகிர்வு பிரச்னை ஒரு தொடர்கதையாக உள்ளது. இந்த பிரச்னை எப்போது தீரும்? ஒரு நல்ல விடியல் பிறக்காதா?
நதிநீர் பகிர்வு நல்லமுறையில் நடைபெற, விவசாயிகள், மக்கள் நித்தமும் தங்களது தெய்வங்களை வேண்டி வழிபட்டு வருகின்றனர்.
அதுமட்டும் அல்லாது விவசாயிகளும், பொதுமக்களும் காவிரி நதியை தாயாக வணங்குகிறார்கள். காவிரி நதிநீர் அதிகமாகப் பயணமாகும் தமிழக டெல்டா பகுதிகளுக்குரிய, உரிமையான 4 டிஎம்சி நீரை காவிரி மேலாண்மை உத்தரவுப்படி வழங்காமல் கர்நாடகா அரசு தாமதப்படுத்தி வருகிறது. இது கண்டனத்திற்குரியது.
கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த மனிதாபிமானமில்லாத செயலால் கடைமடை வரை வரவேண்டிய காவிரி நீர் வராததால், விவசாய நிலங்கள் வெய்யில் காய்ந்து, வெடித்து நாம் கண்ணீர் விடும் நிலையில் உள்ளன.
எனவே, தவெக அரசு காவிரி பிரச்னையை தாமதப்படுத்தாமல், புறக்கணிக்காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பா சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், டெல்டா விவசாயிகளுக்கென தனி போர்க்கால கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும்.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் திறப்பு விவரங்கள், பாசன நீர் விநியோகம், மழை மற்றும் வானிலை முன்னறிவிப்புகள், ஆகியவை விவசாயிகளுக்கு இந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.
விதை மற்றும் உரங்கள் இருப்பு, வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிர்க் காப்பீடு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தகவல்களையும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நேரடியாக வழங்குவது, வேளாண்மைத் துறை மற்றும் நீர்வளத் துறை உள்ளிட்ட துறைகளுக்கு ஒருங்கிணைத்து, விவசாயிகளின் குறைகளுக்கு உடனடித் தீர்வு காணவும், தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளைப் போல, விவசாயக் கடன் கட்ட முடியாத நிலையில் தவித்து நிற்கும் விவசாயி உடனடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தவெக அரசை வலியுறுத்தியுள்ளார்.
Summary
The TVK government should take action to get Cauvery water: Nainar Nagendran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


