சீர்காழி: இட்லி கடைக்காரரிடம் உலோக சிலைகள், துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் - மூவர் கைது!
சீர்காழியில் இட்லி கடைகாரரிடம் உலோக சிலைகள், துப்பாக்கியை பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்தது பற்றி...

கைதான மூவர்.
சீர்காழியில் இட்லிக் கடைகாரரிடம் உலோக சிலைகள், துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸார் கணவர், மனைவி உள்ளிட்ட மூவரை சனிக்கிழமை கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை மாலை, காவல் ஆய்வாளர் கமல்ராஜ் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேரைப் பிடித்து சோதனையிட்டபோது, அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தைக் கைப்பற்றிய போலீஸார், மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அவர்கள் சீர்காழி அரியாபிள்ளை குளத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (47), அவரது மனைவி ரோஸ்லின் (41), மற்றும் விளந்திடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹாதி (25) என்பதும், சுரேஷும் அவரது மனைவியும் இணைந்து அரியா பிள்ளை குளக்கரையில் தள்ளுவண்டியில் இட்லிக் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.
சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாமி உலோகச் சிலைகள், குளோரோபார்ம், துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களைப் போலீஸார் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், மூவரையும் கைது செய்து, சிலைகளும் துப்பாக்கியும் எங்கிருந்து வந்தன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா, கைது செய்யப்பட்ட மூவரிடமும் நேரில் விசாரணை நடத்தினார். இட்லிக் கடைக்காரர் வீட்டில் அதிநவீன துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சீர்காழிப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Summary
Police in Sirkazhi seized metal idols and a gun from an idli vendor and arrested three people, including a husband and wife.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


