நேபாள வெள்ளத்தில் தப்பி கோவை வந்த பக்தர்கள்! குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்பு!

நேபாள வெள்ளத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பியவர்கள், கோவை விமான நிலையம் வந்தடைந்த நிலையில் அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர்.

கோவை வந்த தமிழர்கள் - DIN

Published On :1 செப்டம்பர் 2026, 11:03 am IST

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் சிக்காமல், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தமிழகத்தைச் சேர்ந்த கைலாய பக்தர்கள், விமானம் மூலம் பாதுகாப்பாக கோவை வந்தடைந்தனர். தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் அழிவு ஏற்பட்டதை அறியாமல் ஆன்மிகப் பயணத்தைத் தொடர்ந்த இவர்கள், தற்போது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இணைந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story image

கோவையில் இருந்து இரும்பொறை ஓதிமலை முருகன் கோயில் அர்ச்சகர் சுவாமிநாதன் தலைமையில் திருப்பூரைச் சேர்ந்த யோகேஷ் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 18-ஆம் தேதி நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குப் புறப்பட்டனர். இவர்களுடன் நேபாளத்தைச் சேர்ந்த 7 வழிகாட்டிகளும் உடன் சென்றனர்.

Story image

வெள்ளப்பெருக்கு

கடந்த 26 ஆம் தேதி நேபாள நாட்டின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்புதான் அவர்கள் அந்தப் பகுதியைக் கடந்து சென்றிருந்தனர். தாங்கள் சென்ற இடமே சில நாள்களில் சுடுகாடு போல மாறியதை பிற்காட்சியாக அறிந்த அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இருப்பினும், அவர்கள் அப்போது வெள்ளப் பாதிப்புப் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் சீன எல்லைப் பகுதியில் இருந்ததால் காயமின்றித் தப்பினர். இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் வெள்ளச் செய்தியைக் கேட்டுத் தொலைபேசி வாயிலாகத் தொடர் அச்சத்திலும் பதற்றத்திலும் இருந்தனர். எனினும் வாட்ஸ்அப் மற்றும் விடியோ கால் மூலம் தொடர்புகொண்டு உறவினர்கள் நிலவரத்தைக் விசாரித்து வந்தனர்.

Story image

பாதுகாப்பான மீட்பு மற்றும் வருகை

சீன ராணுவம் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் நிலச்சரிவு மற்றும் சாலைப் பாதிப்புகளைக் கடந்து, இந்த குழுவினர் நைலம் பகுதி வழியாக தில்லி வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்பினர்.

முன்னதாக, (திங்கள்கிழமை) சிலர் கோவை திரும்பிய நிலையில், செப்டம்பர் 1 (செவ்வாய்க்கிழமை) காலை 8.10 மணியளவில் மேலும் 28 பேர் கொண்ட குழுவினர் விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர். கோவை விமான நிலையத்தில் தங்களது சொந்தங்களை நீண்ட நாள்களுக்குப் பிறகு கண்ட மகிழ்ச்சியிலும், ஆபத்திலிருந்து மீண்டு வந்த நெகிழ்ச்சியிலும் உறவினர்கள் அவர்களைக் கட்டியணைத்துக் கண்ணீருடன் வரவேற்றனர். மலர் கொத்துகளை வழங்கியும் தங்களது அன்பைத் தெரிவித்தனர்.

Story image

நெகிழ்ச்சி...

கோவையை வந்தடைந்த அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் அங்கு சென்றிருந்தபோது கடவுள் கருணையால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. நாங்கள் கடந்த அந்த இடமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பின்னர்தான் தெரியவந்தது.

எங்களுடன் வந்த நேபாள வழிகாட்டி ஒருவரின் சகோதரர் இந்த வெள்ளத்தில் உயிரிழந்த சோகம் நேர்ந்தபோதும், அவர் எங்களை பாதுகாப்பாகக் கவனித்து கடைசி வரை உடன் வந்தார்.

சீன ராணுவமும், மத்திய, மாநில அரசுகளும் எங்களை மீட்க உறுதுணையாக இருந்தன. மறுபிறவி எடுத்தது போல உணர்கிறோம்" என்று உருக்கமாகத் தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் எந்தவிதப் பாதிப்புமின்றி பாதுகாப்பாக நாடு திரும்பியது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Family members welcome devotees returning to Coimbatore after surviving the Nepal floods

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.