மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன்தான் நிரந்தரம்! - மு.க. ஸ்டாலின் பேச்சு!
மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன்தான் நிரந்தரம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
கொள்கை அற்ற, கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும்போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம் என தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக உள்கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக, இன்று (செப். 2) காணொலி வாயிலாக நடைபெற்ற கழக மறுசீரமைப்பு தலைமைக் கழகப் பிரதிநிதிகள் கூட்டத்தை, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைப் பிடித்த மாநிலக் கட்சி திமுக எனவும், மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம் எனவும் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“ நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைப் பிடித்த மாநிலக் கட்சி சாதனைகள் பல படைத்த கட்சி என்ற பெருமை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. அதற்குக் காரணம், அப்படியே தேங்கி நின்றுவிடாமல், காலத்திற்கு ஏற்ற மாதிரி நாம் அப்டேட் ஆகி, அப்கிரேட் ஆவதுதான்.
மாற்றங்கள் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும்" என்று சொல்லி, DMK 2.0-விற்கான பயணத்தை இப்போது நாம் தொடங்கியிருக்கிறோம். நடந்து முடிந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து, வெற்றிப் பாதைக்கு நாம் திரும்ப வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
கழகத்தின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளைப் பரிந்துரை செய்ய, கழக மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம். அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தோம்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆக. 28-ஆம் தேதி 110 மாவட்டங்களை அறிவித்தோம். இந்தச் செயல்பாட்டின் அடுத்த கட்டப் பணியைச் சிறப்பாகச் செய்ய நேற்று முன்தினம், தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக உங்கள் அனைவரையும் அறிவித்திருக்கிறோம். கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்ற நீங்கள், என்னுடைய கண்களாகவும் காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடுகளும் பார்க்காமல் எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளைச் சரியாகச் செய்துவிட்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு காரணமாகவும் ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பலருக்கும் இப்போது இருக்கும்பொறுப்புகள் பறிபோகும். அவர்கள் யாரையும் நான் கைவிடப் போவதில்லை. அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் முடிவெடுக்கப்படும்.
இன்றைக்கு காலையில் மறுசீரமைப்புக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் தலைமைக் கழகத்தின் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தங்கம் தென்னரசு அவர்களிடம் கேளுங்கள்.
கொள்கை அற்ற, கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும்போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும். கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம். இன்று நாம் செய்யும் பணிகள் நாளை வரலாறாய் நிலைத்து நிற்கும். கழகத்தை மறுசீரமைப்போம்” எனக் கூறியுள்ளார்.
Summary
Parties lacking principles and structure will come and go. Fireflies are not permanent; only the sun is permanent so stated M.K. Stalin.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





