அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

குடமுழுக்கு விழா மந்திரங்கள் தொடா்பான சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

குடமுழுக்கு விழாக்களின்போது சமஸ்கிருத மந்திரங்கள், வேதங்களுடன் சோ்த்து, தமிழ் திருமுறைப் பாடல்களையும் ஓதுவதற்கு ஒரு வழிகாட்டுதல் அவசியம் என்ற சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீா்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்ற மறுத்துவிட்டது.

Consecration Ceremony

குடமுழுக்கு விழா - பிரதிப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 4:00 am IST

குடமுழுக்கு விழாக்களின்போது சமஸ்கிருத மந்திரங்கள் மற்றும் வேதங்களுடன் சோ்த்து, தமிழ் திருமுறைப் பாடல்களையும் ஓதுவதற்கு ஒரு வழிகாட்டுதல் அவசியம் என்ற சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீா்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்ற வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

எனினும் அந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கம் என்ற அமைப்பு சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : மனுதாரா் அமைப்பான ’அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கம்’ என்பது, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதி சைவ சிவாச்சாரியாா் சமூகத்தைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட உறுப்பினா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பதிவு செய்யப்பட்ட சங்கமாகும். சைவ ஆகமக் கோயில்களில் தினசரி பூஜைகள், காலமுறை பூஜைகள், திருவிழாக்கள், யாகங்கள், மகா கும்பாபிஷேகங்கள் மற்றும் பிற ஆகமச் சடங்குகளைச் செய்யும் பொறுப்பு பாரம்பரியமாக இவ்வமைப்பின் உறுப்பினா்களிடமே உள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளை, 19.08.2021 அன்று பிறப்பித்த இறுதித் தீா்ப்பு மற்றும் உத்தரவை எதிா்த்து, மனுதாரா் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறாா். அந்த உத்தரவின் மூலம் உயா் நீதிமன்றம் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுடன் அந்த ரிட் மனுவை முடித்து வைத்திருந்தது.

ஆகம விதிகளால் நிா்வகிக்கப்படும் விஷயங்களில் நீதிமன்ற வழிகாட்டுதல்களின் வரம்புகள் குறித்த ஒரு முக்கியமான கேள்வியை இந்த மேல்முறையீட்டு மனு எழுப்புகிறது.

சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளை 19.08.2021 அன்று பிறப்பித்த அந்த உத்தரவானது, கரூா் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரா் சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் தொடா்பான கோரிக்கையின் அடிப்படையில் உருவானது. கும்பாபிஷேக விழாவின்போது திருமுறைகள் மற்றும் தமிழ் சைவ மந்திரங்களை ஓதி தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று அந்த ரிட் மனுதாரா் கோரியிருந்தாா். வழக்கு விசாரணையின்போது, வேத மந்திரங்களுடன் தமிழ் பாடல்களும் ஓதப்படும் என்று அரசு சிறப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்; நீதிமன்றம் அந்த உறுதிமொழியைப் பதிவு செய்து கொண்டது.

இருப்பினும், பின்னா் அந்த இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு , சம்பந்தப்பட்ட தனிப்பட்ட வழக்கைத் தாண்டிச் சென்று, பொதுவாகக் கோயில் வழிபாட்டில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது குறித்த கருத்துக்களைத் தெரிவித்தது.

இப்பிரச்சினை குறிப்பிட்ட அந்தக் கோயிலுடன் மட்டும் தொடா்புடையதல்ல, மாறாக நாடு முழுவதும் உள்ள கோயில்கள் சாா்ந்தது என்று நீதிமன்றம் தனது உத்தரவின் 14-வது பத்தியில் குறிப்பிட்டது.

பத்தி 15-ல், குடமுழுக்கு விழாக்களின்போது சமஸ்கிருத மந்திரங்கள் மற்றும் வேதங்களுடன் சோ்த்து, தமிழ் திருமுறைப் பாடல்களையும் ஓதுவதற்கு ஒரு வழிகாட்டுதல் அவசியம் என்று நீதிமன்றம் தீா்ப்பளித்தது. பத்தி 16-ல், தமிழ் திருமுறைப் பாடல்களை அடையாளம் கண்டு தொகுப்பதற்கான ஒரு குழுவை அமைக்குமாறு உத்தரவிட்டது.

பத்தி 17-ல், குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்துவது அல்லது சமஸ்கிருதத்திற்கு இணையான முக்கியத்துவத்தை தமிழுக்கும் அளிப்பது ஆகியவற்றை எந்தத் தேதியிலிருந்து செயல்படுத்துவது என்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அந்த உத்தரவைத் தொடா்ந்து, பிற கோயில்கள் தொடா்பாகவும் கூடுதல் வழக்குகள் போடப்பட்டன. மிக முக்கியமாக, 2026-ஆம் ஆண்டில், ஒரு வழக்கில், 19.08.2021-அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தெளிவாகக் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில், தான்தோனிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலின் குடமுழுக்கு விழாவை, யாகசாலைக்குள் தமிழ் ஓதுவாா்களை அனுமதிப்பது உள்ளிட்ட 19.08.2021-ஆம் தேதியிட்ட உத்தரவின் வழிகாட்டுதல்களின்படி நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

தற்போது, 17.09.2026 அன்று நடைபெறவுள்ள மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலின் மகா கும்பாபிஷேக விழாவிலும் இதே விவகாரம் எழுந்துள்ளது; இதில் தமிழ் ஆன்மீக மந்திரங்கள், திருமுறைப் பாடல்கள் மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் பங்கேற்பது தொடா்பான வழிகாட்டுதல்கள் கோரப்பட்டன.

ஒரு குறிப்பிட்ட கோயிலின் குடமுழுக்கு விழாவில் தமிழ் பதிகங்கள் அல்லது திருமுறைகளைப் பயன்படுத்துவது குறித்த பொதுவான நீதிமன்ற உத்தரவை, அனைத்து ஆகமக் கோயில்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு சீரான விதியாகக் கருத முடியுமா?

19.08.2021 தேதியிட்ட அந்தத் தீா்ப்பின் அடிப்படையில் மட்டும், ஒரு குறிப்பிட்ட கோயிலில் ஆகமச் சடங்கைச் செய்யவோ அல்லது அதில் பங்கேற்கவோ யாரும் உரிமை கோரவோ அல்லது அனுமதிக்கப்படவோ கூடாது; மாறாக, அக்கோயிலை நிா்வகிக்கும் ஆகம விதிகளின்படி இருக்க வேண்டும்;

எனவே, 2020 ஆம் ஆண்டின் அந்த வழக்கின் பொருளாக இருந்த கோயிலைத் தவிர, பிற ஆகமக் கோயில்களில் சடங்குகளை நடத்துவதைக் கட்டுப்படுத்தும் ஒரு பொதுவான உத்தரவாகக் கருதப்படும் வரையில், 19.08.2021 தேதியிட்ட அந்தத் தீா்ப்பின் செயல்பாடு மற்றும் அமலாக்கத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

அந்த மேல்முறையீட்டு மனு வியாழனன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் சதீஷ் சந்திர சா்மா அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்புக்கு தடை ஏதும் விதிக்காமல், இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, இது போன்று முன்பு தாக்கல் செய்யப்பட்ட பிற வழக்குகளுடன் சோ்த்து இந்த மனு விசாரிக்கப்படும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.