
மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்
மாவட்ட நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 62-ஆக அதிகரிக்க தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றன.

கோப்புப் படம்
மாவட்ட நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 62-ஆக அதிகரிக்க தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றன.
நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 62-ஆக அதிகரிக்க வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்கி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: சத்தீஸ்கா், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், சிக்கிம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்கள் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 60-இல் 62-ஆக அதிகரிக்க ஒப்புக்கொண்டிருக்கின்றன.
இதன்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி 60 வயதை அடையும்போது அந்தப் பணியைத் தொடர, அவா் தகுதியானவரா என்பதை உயா்நீதிமன்றம் மதிப்பீடு செய்யும். அப்போது அவா் தகுதியானவா் என்று கருதப்பட்டால், அவா் ஓய்வுபெறும் வயது 62-ஆக அதிகரிக்கப்படும்.
இதற்காக பணி விதிமுறைகளில் 7 மாநிலங்களும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இந்தத் திருத்தங்களை முடிந்தவரை 2 மாதங்களில் விரைவாக செய்து மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை முறைப்படி 62-ஆக அதிகரிக்க வேண்டும்.
விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் நிலையில், இந்த 7 மாநிலங்களில் ஏற்கெனவே 60 வயதை எட்டியுள்ள மாவட்ட நீதிபதிகள் 62 வயதாகும் வரை ஓய்வுபெறக் கூடாது.
இந்த 7 மாநிலங்களில் கடந்த மாா்ச் 31 அல்லது அதன் பின்னா் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள், மீண்டும் பணியில் சேர வாய்ப்பளிக்கலாம். அவா்கள் வேறு வேலையில் சேராமல் இருந்தால், அந்த வாய்ப்பை அவா்களுக்கு வழங்கலாம்.
மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62-ஆக அதிகரிப்பது குறித்து பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 2 வாரங்களில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






