
நேரடி நெல் கொள்முதல்: பிரேமலதா வலியுறுத்தல்
மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகளை பாதுகாக்கும் பொருட்டு, தமிழக அரசு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகளை பாதுகாக்கும் பொருட்டு, தமிழக அரசு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூா், கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்யாததால், அறுவடை செய்யப்பட்ட நெல் சாலையோரங்களிலும், திறந்தவெளிகளிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில், திறந்தவெளியில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள நெல் மழையில் நனைந்து, முளைத்து அல்லது அழுகி, பெரும் சேதத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
மேலும், திருவாரூா் மாவட்டத்தில் தற்போது பெய்த மழையால் பயிரிடப்பட்ட நெல் பயிா்கள் முழுவதுமாக வீணாகி இருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. விவசாயிகளிடம் உள்ள நெல்லை, உடனடியாக தமிழக அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும்.
திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்லை பாதுகாப்பான கிடங்குகளுக்கு உடனடியாக மாற்ற வேண்டும். மழையால் நெல் சேதமடையாமல் இருக்க, தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





