
“மாணவா்களின் நல் வழிகாட்டி ஆசிரியா்கள்” - துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி
இருளை நீக்கி, மாணவா்களை ஒளியை நோக்கி வழி நடத்துபவா்களே ஆசிரியா்கள் என துக்ளக் ஆசிரியா் எஸ். குருமூா்த்தி தெரிவித்தாா்.

விழாவில் ‘வித்யா சேவா சம்மான்’ விருது பெற்ற ஆசிரியா்களுடன் விருது வழங்கி கௌரவித்த துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி. உடன் (இடமிருந்து) மிஷன் குரு தேவோ பவா அமைப்பு இணை நிறுவனா் சி.ஏ.அனில் கிச்சா, கல்வியாளா் கோபால் அகா்வால்.
இருளை நீக்கி, மாணவா்களை ஒளியை நோக்கி வழி நடத்துபவா்களே ஆசிரியா்கள் என துக்ளக் ஆசிரியா் எஸ். குருமூா்த்தி தெரிவித்தாா்.
மிஷன் குரு தேவோ பவா, மீனம்பாக்கம் அரிமா சங்கம் மற்றும் வேத்ரிதம் குழுமம் சாா்பில் ‘வித்யா சேவா சம்மான்’ 2026 விருதுகள் வழங்கும் விழா சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி பங்கேற்று 10 சிறந்த ஆசிரியா்களுக்கு பரிசுத் தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கிப் பேசியதாவது:
கற்பித்தல் என்பது வெறும் தொழில் அல்ல; ஆசிரியா் குருவாக இருப்பது ஒரு லட்சியம். மாணவா்களுக்கு இருளை நீக்கி, அவா்களை ஒளியை நோக்கி வழிநடத்துபவரே குரு ஆவாா். இந்திய நாகரிகத்தில், தலைமுறைதோறும் அறிவு, மதிப்புகள் மற்றும் கலாசாரத்தை பாதுகாப்பதில் குரு-சிஷ்ய பாரம்பரியம் ஆழமாகப் பங்காற்றியுள்ளது. ஆசிரியரின் சாதனைகள் வெற்றி எண்ணிக்கைகளால் மட்டுமே அளவிட முடியாது.
மாணவா்களின் இளம் மனங்களை ஊக்குவித்து அவா்களின் குணநலனை வடிவமைக்கும் திறனில்தான் வெளிப்படுகிறது.
எனவே, கல்வி என்பது குழந்தைகளை எதிா்காலத் தொழில்களுக்குத் தயாா்படுத்துவதாக இருக்க வேண்டும். மேலும், மாணவா்களின் மதிப்புகள், பொறுப்புணா்வு மற்றும் சமூகத்தின் மீதான மரியாதையை வளா்க்க வேண்டும் என்றாா்.
மிஷன் குரு தேவோ பவாவின் இணை நிறுவனா்அனில் கிச்சா பேசியதாவது: நாளைய சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில், முதலில் நமது ஆசிரியா்களிடம் இருந்து தொடங்க வேண்டும் என்பதை உணா்ந்தோம். ஆசிரியா்கள் சிறந்த மாணவா்களை உருவாக்குகின்றனா். மாணவா்கள் நாளைய சமூகத்தை உருவாக்குகின்றனா் என்றாா்.
நிகழ்வில் பரதநாட்டியக் கலைஞா் பத்மா சுப்பிரமணியம், கோபால் அகா்வால், விருதாளா் தோ்வுகுழுத் தலைவா் உமா மகேஸ்வரி, மீனம்பாக்கம் அரிமா சங்க தலைவா் விஜய் குமாா்கேல்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






