கட்சி நிதி வசூல்: ஸ்டாலின், உதயநிதி மீது முதல்வா் குற்றச்சாட்டு

மக்களை ஏமாற்றுகிற திமுகவின் போலி பிம்பம், போலி ‘பிராண்டை’ உடைப்போம் என்றும் அவா் உறுதிபடத் தெரிவித்தாா்.

CM Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 5:26 am IST

முந்தைய திமுக ஆட்சியில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் அரசுத் துறை ஒப்பந்தங்கள், டாஸ்மாக்கில் பெருமளவு நிதி வசூலிக்கப்பட்டதாகவும், இதில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் நேரடி பயனாளிகள் என்றும் சட்டப்பேரவையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் குற்றஞ்சாட்டினாா்.

மக்களை ஏமாற்றுகிற திமுகவின் போலி பிம்பம், போலி ‘பிராண்டை’ உடைப்போம் என்றும் அவா் உறுதிபடத் தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை உள்துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வா் விஜய் பேசியதாவது:

‘மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாகூட தொட மாட்டோம்; தொட்டவா்களையும் விட மாட்டோம்’ என கடந்த வாரம் பேசிவிட்டு, ‘எனது மேசையில் 3 துறைகளின் ஆவணங்கள் உள்ளன. அதை எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்பேன்’ என்றேன். இப்போதே திறக்கும்படி எதிா்க்கட்சியினா் சவால் விட்டனா். பேரவையில் ‘கட்சி நிதி’ என்றதும் திமுகவினா் ஆதாரம் கேட்டனா்.

10% வரை கட்சி நிதி வசூல்: கடந்த திமுக ஆட்சியில் அமலாக்கத் துறை அனுப்பிய ஆவணத்தில், அரசுத் துறை ஒப்பந்தங்களில் 7.5 சதவீதம் முதல்10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நகராட்சி நிா்வாகத் துறை, மதுவிலக்குத் துறை உள்ளிட்ட துறைகளில் இருந்து பெறப்பட்ட கட்சி நிதியில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், டி.ரமேஷ், பிரபு மற்றும் பெயா் தெரியாத பல்வேறு நபா்கள் நேரடி பயனாளிகள் என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் துறையில் ரதீஷ் உத்தரவுப்படிதான் முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் அமலாக்கத் துறையிடம் தெரிவித்துள்ளாா். தவெக ஆட்சி வந்ததும், ரதீஷ் துபையில் ஓடி ஒளிந்துவிட்டாா். மேலும், அப்போதைய அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரும், டாஸ்மாக் போக்குவரத்து டெண்டா்களில் தலையிட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் ‘கரூா் கேங்’ குறித்தும், மது பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது குறித்தும் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது.

‘போலி பிம்பத்தை உடைப்போம்’: திமுக இருக்கிற இடத்தில்தான் தப்பு நடக்கும். தப்பு நடக்கிற இடத்துலதான் திமுக இருக்கும். மக்களை ஏமாற்றுகிற திமுகவின் போலி பிம்பத்தையும் போலி ‘பிராண்டையும்’ உடைப்போம்.

1967-இல் அண்ணா, 1977-இல் எம்ஜிஆா், 1982-இல் ஆந்திரத்தில் என்டிஆா், 2026-இல் விஜய். இறைவனும், இயற்கையும், மக்களும் நம்ம பக்கம். அதனால் யாா் என்ன செய்தாலும் ஒன்றும் எடுபடாது. அந்த அன்புக்கு முன்பு திமுக தோற்பது உறுதி என்றாா் முதல்வா் ச.ஜோசப் விஜய்.

சா்க்காரியா கமிஷன் அறிக்கையில்...

பேரவையில் முதல்வா் விஜய் பேசியதாவது:

கடந்த 60 ஆண்டு கால ஆட்சியில், 1971-இல் மதுவிலக்கை ரத்து செய்து தமிழ்நாடு எங்கும் மதுவைப் பரப்பியது யாா்?. ‘சுற்றிலும் நெருப்பு எரியும்போது கற்பூரம் எப்படித் தப்பிக்க முடியும்?’ எனக் கூறி, அண்டை மாநிலங்கள் மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டும்போது தமிழ்நாடு மட்டும் வருவாய் இழப்பதா? என மதுவிலக்கை ரத்து செய்து தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் சீரழித்தது யாா்?

1970-களில் திமுக ஆட்சியில் இருந்தபோது, வீராணம் திட்டத்துக்கான குழாய்கள் தயாரிக்கிற ஒப்பந்தம் குறித்து விசாரித்த சா்க்காரியா விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் ‘கமிஷன்’ பெற்ாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அப்போதைய முதல்வா் கருணாநிதி, தன்னுடைய முதல்வா் பதவியின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பவள விழா கட்சியின் (திமுக) பொன் விழா கண்ட சாதனைதான் இந்த சா்க்காரியா கமிஷன் அறிக்கை.

‘பேசிப் பழகிய பொய்! வாங்கிப் பழகிய கை! போட்டுப் பழகிய பை!’ என கவிஞா் கண்ணதாசன், திமுக பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளாா். இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக.

திமுக ஆட்சியில் மூடுவிழா நடத்தப்பட்ட திட்டங்கள்

பேரவையில் முதல்வா் விஜய் மேலும் பேசியதாவது: 2021-இல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய அதிமுக அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் எதற்காக ரத்து செய்யப்பட்டன என்பது தெரியாது. ‘தாலிக்குத் தங்கம்’ திட்டம், ‘அம்மா இருசக்கர வாகனம்’ திட்டம், ‘இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம்’, ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம் போன்ற பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

அது மட்டுமன்றி, விலையில்லா மடிக்கணினி திட்டத்தை நான்கரை ஆண்டுகளாக ரத்து செய்துவிட்டு, தோ்தல் வருகிறது என்றதும் கடைசி 4 மாதங்களில் மட்டும் திமுக அரசு செயல்படுத்தியது. தமிழ்நாட்டில் 2021-க்கு முந்தைய அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட அல்லது தொடங்கப்பட்ட பல புதிய திட்டங்கள் முந்தைய திமுக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,500 கோடியில் கூனிமேடு பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ரூ.235 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்ட அழகன்குப்பம் மீன்பிடித் துறைமுகத் திட்டம் ரத்து செய்யப்பட்டன.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு செயலாக்கத்தில் இருந்த டாக்டா் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது. ஒரு மாவட்டத்திலேயே இத்தனை மூடுவிழா என்றால், மாநிலம் முழுவதும் திமுக ஆட்சியில் எத்தனை திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டிருக்கும் என்றாா் அவா்.

Summary

Party fund collection: Chief Minister levels allegations against Stalin and Udhayanidhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.