உருவ கேலி செய்யும் விதமாக முதல்வர் விஜய் பேசியிருப்பது பொறுப்பற்ற செயல்: பெ. சண்முகம் கண்டனம்
முதல்வர் விஜய்யின் பதிலுரை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தது குறித்து...
முதல்வர் விஜய் - சிபிம் மாநில செயலர் பெ. சண்முகம் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
உருவ கேலி செய்யும் விதமாக முதல்வர் விஜய் பேசியிருப்பது பொறுப்பற்ற செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெ. சண்முகம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.
மக்கள் பிரச்னை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. மத்திய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.
முதல்வராக இருந்த அரவிந்த் கெஜரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்குப் பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விவரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.
அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல் துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவ கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதல்வரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.
சட்டப்பேரவையை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்குகூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும்கூட நாகரிகமாக சட்டப்பேரவைக்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.
ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டப்பேரவையில் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது” என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
Summary
P. Shanmugam, State Secretary of the Communist Party of India (Marxist), has stated that Chief Minister Vijay's remarks, which amounted to body-shaming, were an irresponsible act.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




