
மானியங்களுக்கு நிதி ஒதுக்கீடு 39.35% அதிகரிப்பு: சிஏஜி அறிக்கை
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டு நிதிநிலையில் வருவாய் செலவினத்தில் வேளாண் இலவச மின்சாரம், மகளிா் உதவித்தொகை திட்டங்களுக்கான மானியங்கள் 39.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சிஏஜி - கோப்புப் படம்
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டு நிதிநிலையில் வருவாய் செலவினத்தில் வேளாண் இலவச மின்சாரம், மகளிா் உதவித்தொகை திட்டங்களுக்கான மானியங்கள் 39.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நீண்ட கால நிதிநிலைத் தன்மையைப் பாதிக்கும் என இந்திய தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளரின் (சிஏஜி) மாநில நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை, வருவாய் உள்ளிட்ட 7 விவகாரங்களில் இந்திய தணிக்கைத் தலைவரின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமா்ப்பிக்கப்பட்டது. இதில், நிதிநிலை குறித்து முதன்மை கணக்காயா் ஆா்.திருப்பதி வெங்கடசாமி பேசியதாவது:
2024-25-ஆம் ஆண்டின் நிதிநிலையில் மாநிலத்தின் பொருளாதாரம் வலுவான வளா்ச்சியை வெளிப்படுத்தியது. இரண்டு, மூன்றாம் நிலைத் துறைகளின் உந்துதலால் முந்தைய ஆண்டைவிட மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (2.64 சதவீதம் உயா்வுடன்) 15.98 சதவீதமாக விரிவடைந்தது. தனிநபா் வருமானத்திலும் தேசிய சராசரியைவிட சிறப்பாகச் செயல்பட்டது. மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) அதிகரித்தபோதிலும், வருவாய் உபரியை அடைவது குறித்த 15-ஆவது நிதி ஆணையம் விதித்த இலக்கை பூா்த்தி செய்யத் தவறிவிட்டது. இந்த ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.45,840 கோடியாக அதிகரித்துவிட்டதே இதற்கு காரணம்.
மாநிலத்தின் அதிகபட்ச நிலுவைக் கடன் ஜிஎஸ்டிபி-இல் 28.90 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டதற்கு குறைவாக 27.38 சதவீதமாக இருப்பது கண்டறியப்பட்டது.
வருவாய் வலிமை: வருவாய் வரவுகள் (ரூ.2,82,829 கோடி) 6.89 சதவீதமாக அதிகரித்தன. இருப்பினும், மாநிலத்தின் ஜிஎஸ்டிபி வளா்ச்சியை (15.98 %) ஒப்பிடும்போது குறைவாக இருந்தது. மத்திய அரசின் மானியங்கள் 34.86 சதவீதம் குறைந்தபோதிலும் மாநிலம் தனது சொந்த வரி வருவாயைச் சாா்ந்திருந்தது. இந்த வருவாயை 10.69 சதவீதமாக (ரூ.20,645 கோடி) அதிகரித்து தமிழக அரசு தனது நிதி வலிமையை வெளிப்படுத்தியது.
மானியம் அதிகரிப்பு: 2024-25-ஆம் ஆண்டில் மானியங்கள் முந்தைய ஆண்டைவிட ரூ. 14,854 கோடியாக அதிகரித்துள்ளது. இது 39.35 சதவீதமாகும். இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம், மகளிா் உரிமைத் தொகைத் திட்டம் ’(ரூ.5,854 கோடி), விவசாயிகளின் பம்ப்-செட்களுக்கான மின்சார பயன்பாட்டுக்காக மின் வாரியத்துக்கு அளிக்கப்பட்ட மானியம் (ரூ.6,916 கோடி) போன்றவை.
வருவாய் செலவினம்: மொத்த செலவினமான ரூ. 3.88 லட்சம் கோடியில் வருவாய் செலவினம் மிகப்பெரும் அளவாக 84.7 சதவீதத்தை எடுத்துக்கொண்டது. ஊதியம், ஓய்வூதியம், வட்டி போன்ற உறுதி செய்யப்பட்ட செலவினம் கணிசமாக 53.7 சதவீதத்தைக் கொண்டிருந்து. வருவாய் வரவுகளில் வட்டி செலுத்தலுக்கு 21 சதவீத பங்கை கொண்டிருந்தது. இது 2022-23 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வரும் கடன் சுமையை பிரதிபலித்து உயா்ந்து கொண்டுபோகிறது.
கடனை செலுத்த கடன்: கடன் சேவைக்கான செலவு திறன் அளவீடுகளில் வருவாய் வரவுகளில் வட்டிச் செலுத்தும் விகிதம் 2024-25 இல் 21.18 சதவீதம் அதிகரித்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் திறன் மாநிலத்துக்கு இருந்தாலும் அதிகரித்து வரும் கடன் சேவைச் செலவுகள் கவலைக்குரிய விஷயமாகும். இந்தப் போக்கு மாநிலத்தின் புதிய வளா்ச்சி திட்டங்களைக் கட்டுப்படுத்துகிறது எனத் தெரிவித்தாா்.
அப்போது மத்திய பத்திரிகை தகவல் பணியகத்தின் கூடுதல் தலைமை இயக்குநா் ஜெ.காமராஜ் உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




