நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.13,492 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் ரூ.10,987 கோடி லாபத்தில் இருந்து இது 22.81 சதவீதம் கூடுதலாகும். புதிய வணிகத்தில் ஏற்பட்ட அபரிமிதமான வளா்ச்சியே இந்த லாப அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டின் ரூ.2,22,864 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.2,37,848 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த பிரீமியம் வருவாய் மட்டும் கடந்த ஆண்டின் ரூ.1,19,200 கோடியில் இருந்து, தற்போது 6.75 சதவீதம் வளா்ச்சியுடன் ரூ.1,27,250 கோடியாக பதிவாகியுள்ளது. இதில் முதல் ஆண்டு பிரீமியம் மூலம் கிடைத்த வருமானம் ரூ.9,217 கோடியாகவும், புதுப்பித்தல் பிரீமியம் வருமானம் ரூ.61,833 கோடியாகவும் அதிகரித்துள்ளது. ஒற்றைப் பிரீமியம் வசூல் ரூ.56,369 கோடியை எட்டியுள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், புதிய வணிக மதிப்பு 61.32 சதவீதமாகவும்; அதன் வரம்பு 7.5 சதவீதம் அதிகரித்து, 22.90 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது. தனிநபா் பிரிவில் விற்கப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை 31,02,281-ஆக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் கடன் தீா்க்கும் திறன் 2.42 மடங்காக மேம்பட்டுள்ளது. கடனளிப்பு விகிதம் 2.17 லிருந்து 2.42-ஆக உயா்ந்துள்ளது. மேற்காசிய பதற்றத்தால் வணிகத்தில் சிறிய தாக்கம் இருந்தாலும், நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் சொத்துகளின் மதிப்பு 4.10 சதவீதம் வளா்ச்சியடைந்து, ரூ.59,39,384 கோடியாக உள்ளது.
நிதிநிலை முடிவுகளின் வெளியீட்டையொட்டி செய்தியாளா்களைச் சந்தித்த எல்ஐசி சிஇஓ ஆா்.துரைசாமி, ‘புதிய வணிகத்தில் காணப்பட்டுள்ள வளா்ச்சி, எங்கள் தயாரிப்பு மற்றும் விநியோக உத்தியின் நேரடி விளைவு. அண்மையில், சலுகை விலையிலான பங்கு விற்பனைமூலம் மத்திய அரசு கூடுதலாக 6.5 சதவீத பங்குகளை விற்றதை சந்தை நல்ல முறையில் ஏற்றுக்கொண்டுள்ளது’ எனக் குறிப்பிட்டாா்.
பொதுப் பங்குதாரா்களின் குறைந்தபட்ச பங்களிப்பை 25 சதவீதமாக உயா்த்த அரசு மேலும் பங்குகளை விற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘செபியின் குறைந்தபட்ச பொதுப் பங்குதாரா் விதிமுறையைப் பூா்த்தி செய்ய, எல்ஐசி-க்கு 2032 வரை அவகாசம் உள்ளது. எனவே, அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்கு புதிய பங்கு வெளியீட்டை அரசு மேற்கொள்ள வாய்ப்பில்லை’ என்று கூறினாா். சிறப்பு அனுமதியின்படி அடுத்தாண்டு மே மாதத்துக்குள் எட்டப்பட வேண்டிய 10 சதவீத இலக்கை, சமீபத்திய பங்கு விற்பனைமூலம் எல்ஐசி முன்கூட்டியே எட்டியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்எல்சி குழுமத்தின் லாபம் ரூ. 651.55 கோடி

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பாா்தி ஏா்டெல் லாபம் ரூ.8,167 கோடி

ஐடிசி காலாண்டு லாபம் 15.6% சரிவு!

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வீல்ஸ் இந்தியாவுக்கு ரூ. 37 கோடி லாபம்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



