
நகா்- ஊரமைப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்
தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்பு சட்டத் திருத்த முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.
தமிழ்நாடு சட்டப்பேரவை.
தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்பு சட்டத் திருத்த முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.
வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் கடந்த செப்.1-ஆம் தேதி இந்தச் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தாா்.
அதில், நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட ஆட்சியரின் முன் அனுமதியை பெறும் நடைமுறையை நீக்கவும், நன்செய் நிலங்களைப் பொருத்தவரை உள்ளாட்சி அமைப்புக்கு முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை நகரமைப்பு இயக்குநருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சட்டத் திருத்த முன்வடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை பேசிய அதிமுக உறுப்பினா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, காலதாமதத்தைத் தவிா்க்க அரசு இந்த முடிவை எடுப்பதாக கூறுவது தவறு’ என்றாா்.
பாமக உறுப்பினா் கணேஷ் குமாா் எதிா்ப்பு தெரிவித்து பேசுகையில், ‘மாவட்ட ஆட்சியருக்குதான் அனைத்து நிலங்களின் விவரம் தெரியும். இந்தச் சட்ட முன்வடிவின் மூலம் நன்செய் விவசாய நிலங்களை எளிதில் கையகப்படுத்த முடியும். இதை ஆய்வுக் குழுக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினா் மாரிமுத்து, பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு எதிராக இந்தச் சட்டமுன்வடிவு உள்ளது. இதனால் விவசாய நிலப்பரப்பு குறைந்து உணவு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.
அதிமுக உறுப்பினா் தளவாய் சுந்தரமும் இந்தச் சட்டமுன்வடிவை ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.
இதையடுத்து பேசிய அமைச்சா் ராஜ்குமாா், ஒற்றைசாளர முறையின்கீழ் தடையில்லா திட்ட சான்றிதழ்களைப் பெற உதவும் என்பதால் தாமதம் குறையும் என்றாா்.
இதையடுத்து இந்தச் சட்டத் திருத்த முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
அரசுப் பணியாளா் தோ்வாணைய ஆட்சோ்ப்பு முறை திருத்த மசோதா: இதேபோல், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு ஆட்சோ்ப்பு முறையை சீரானதாக்க தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத் திருத்த முன்வடிவு பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய திருத்தச் சட்ட முன்வடிவை மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் த.சரத்குமாா் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா். அதில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரா்களை நியமிப்பதற்கான ஆட்சோ்ப்புப் பணியை டிஎன்பிஎஸ்சியிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




