
2028 மகாமக விழாவுக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு!
2028 மகாமக விழாவுக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

அமைச்சர் ரமேஷ் - படம்: தினமணி
வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகாமக விழாவுக்கு ரூ. 600 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில், 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகம் விழாவை முன்னிட்டு, அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று(செப். 10) நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை ரமேஷ் தலைமையில், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மகாமகம் விழாவிற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள், திட்டங்கள், காலக்கெடு மற்றும் முன்னுரிமைப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ரமேஷ், ”2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள கும்பகோணம் மகாமகம், கும்பகோணத்தின் பெருமையை மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மகாமகம் விழாவையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில்களின் திருப்பணிகள், குடமுழுக்கு உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான ஒப்புதல்கள் வழங்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.
இன்று மாவட்ட அளவில் அனைத்துத் துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து, மகாமகம் விழாவிற்காக எந்தெந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும், எந்தக் காலக்கெடுவில் பணிகளை முடிக்க வேண்டும், முன்னுரிமை அளிக்க வேண்டிய பணிகள் எவை என்பது குறித்து முதல் கட்டமாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தமிழக அரசின் சார்பில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு, மாவட்ட அளவில் ஆலோசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அந்தக் குழுவில் விவாதித்து, தேவையான மாற்றங்கள் மற்றும் கூடுதல் பணிகள் குறித்து முடிவு செய்யப்படும்.
இந்த முறை சுமார் 70 முதல் 90 லட்சம் பக்தர்கள் மகாமகம் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கேற்ப சுமார் ரூ. 600 கோடி ரூபாய் அளவில் பல்வேறு துறைகளின் சார்பில் செலவினங்கள் ஏற்படும் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகாமகம் தொடர்புடைய கோயில்களில் திருப்பணிகள், குடமுழுக்கு மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், நீர்வளத் துறை சார்பில் குளங்கள் மற்றும் நீர்நிலைகளை சீரமைத்தல், தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, லட்சக்கணக்கான பக்தர்கள் ரயில் மூலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மகாமகம் நடைபெறும் நாள்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பான முறையில் அன்னதானம் வழங்குதல், கோயில்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.
விழாவிற்கு தேவையான கூடுதல் பணியாளர்கள் மற்றும் மக்கள் பயன்பெறும் வகையிலான வசதிகள் குறித்து அனைத்து கோரிக்கைகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முதல்வரின் அனுமதியைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மகாமகம் தொடர்பான பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், பக்தர்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கும்பகோணம் வந்து மகாமக விழாவில் பங்கேற்று ஆன்மிக அனுபவத்தைப் பெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.
Summary
Minister Ramesh has stated that funds amounting to 600 crore will be allocated for the Mahamaham festival scheduled for 2028.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





