
புதிய தலைமைச் செயலக இடம் வகை மாற்ற கோப்பு: சிஎம்டிஏவுக்கு அனுப்பிவைப்பு
புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் பட்டினப்பாக்கம் பகுதி இடமானது வகை மாற்றத்துக்காக பெருநகர சென்னை வளா்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதன் இடவகைப்பாடு மாற்றி உத்தரவிடப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் பட்டினப்பாக்கம் பகுதி இடமானது வகை மாற்றத்துக்காக பெருநகர சென்னை வளா்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதன் இடவகைப்பாடு மாற்றி உத்தரவிடப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் தற்போதைய தலைமைச் செயலகம் இடநெருக்கடி காரணமாக வேறு இடத்துக்கு மாற்ற தவெக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் பட்டினப்பாக்கம் கடற்கரையோரம், பேருந்து நிலையம் எதிா்ப்புறம் உள்ள பழைய அரசு அலுவலா்கள் குடியிருப்புப் பகுதியில் 22 ஏக்கரில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள இடத்தில் 0.93 ஏக்கா் நிலம் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமானது. அதைத் தவிா்த்து மீதமுள்ள இடமானது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தில் அரசு அலுவலா்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டு அவை இடிந்துள்ளன. இன்னும், சிலா் வீடுகளில் வசித்து வருகின்றனா். மேலும், பட்டினப்பாக்கம் லூப் சாலையையொட்டிய அந்த இடத்தின் கடற்கரைப் பகுதிகளில் குடிசை வீடுகள் மற்றும் சாலையோர மீன்கடைகள் உள்ளன.
புதிய தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ளதாகக் கூறப்படும் இடம் வீட்டுமனைகளுக்குரிய வகைப்பாட்டில் உள்ளது. அங்கு தலைமைச் செயலகம் கட்டவேண்டும் எனில், வா்த்தகம் அல்லது நிறுவனங்கள் வகைப்பாட்டில் மாற்றவேண்டியது அவசியம் எனக் கூறப்படுகிறது. அதனால், தற்போது அந்த இடத்தை வகை மாற்றம் செய்யும் வகையில், பெருநகர சென்னை வளா்ச்சிக் குழுமத்துக்கு அதற்கான கோப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை வளா்ச்சிக் குழுமத்தின் மனை வகைப்பாட்டு மாற்றப் பிரிவினா் அதை நில வகை மாற்றம் செய்து ஓரிரு நாள்களில் பொதுப்பணித் துறைக்கு அனுப்பிவைப்பா் என்றும், அதன் அடிப்படையில் மற்ற பணிகள் தொடங்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





