
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவு
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலையில் மேலும் 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவு

காவலாளி அஜித்தை காவல் துறை அதிகாரி தாக்கும் விடியோவிலிருந்து...
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், டிஎஸ்பி, ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகிய 4 பேர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரையும் 16ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கானது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி முதல் டி.எஸ்.பி. மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் பல்வேறு நபர்களிடமும் விசாரணை நடத்தி மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இதனிடையே இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டது. இவர்கள் 4 பேர் மீதும் சதி செய்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதியட்டது.
இந்நிலையில் இந்த வழக்கானது மதுரை மாவட்ட 5 ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் கைது செய்யப்பட்ட 6 தனிப்படை காவலர்களுடன், டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோரும் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன் டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேர் மீதான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய கோரி வழக்கின் பிரிவை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து 4 பேரையும் வரும் 16 ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் 10 பேரும் மதுரை மத்திய சிறைக்கு பாதுகாப்பாக அழைத்துசெல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





