
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை சேகரிக்க புதிய தொழில்நுட்பம்!
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கு அதிநவீன ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்கள் நிறுவப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை சேகரிக்க ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரம் நிறுவப்படவுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கு அதிநவீன ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்கள் நிறுவப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில், பணியாளர்களின் சுமையைக் குறைக்க புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, தானியங்கி முறையில் இயங்கும் அதிநவீன ‘ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்களை’ தமிழகம் முழுவதுமுள்ள 4,000 டாஸ்மாக் கடைகளில் முதல்கட்டமாக நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெற்று ரூ. 10 வழங்கும் திட்டம் பல மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை விரிவுபடுத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் கே. ராஜசேகர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
இதில், கூடுதல் வழக்கறிஞர் விஜய் நாராயணன் மற்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கே. நந்தகுமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில், ‘தற்போது உள்ள முறையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, பணத்தைத் திரும்பத் தருவதில் தாமதம், சில்லறைப் பற்றாக்குறை மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகின்றது.
இதனைத் தவிர்க்க, டாஸ்மாக் கடைகளின் முன் ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டு மது வாங்குவோர் பாட்டில்களை இயந்திரத்தில் வழங்கி தாங்களே எளிதாக பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறையைக் கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது’ என விளக்கமளிக்கப்பட்டது.
இந்த முறையின் கீழ், முதற்கட்டமாக ஒரு கடைக்கு இரு இயந்திரம் வீதம் தமிழகம் முழுவதும் 4,000 டாஸ்மாக் கடைகளில் இந்த இயந்திரம் நிறுவப்படவுள்ளது. பின்னர், படிப்படியாக அது விரிவுபடுத்தப்படும்.
இந்த நடைமுறைக்காக இயந்திரங்களை அமைப்பதற்கு நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் டெண்டரை டாஸ்மாக் நிர்வகம் வெளியிட்டுள்ளது. இதில், தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் எந்தக் கட்டணமுமின்றி இயந்திரங்களை நிறுவி, பாட்டில் சேகரிப்பு மையங்களுக்கான வாடகையையும் செலுத்த வேண்டும்.
பாட்டிலை திருப்பித் தருபவருக்கு வழங்கும் ரூ. 10 -ஐ அரசு அந்நிறுவனத்திற்குச் செலுத்திவிடும். சேகரிக்கப்படும் பாட்டில்கள் அந்நிறுவனத்தின் லாபமாக இருக்கும்.
அதேநேரம், பாட்டில் ஒன்றுக்கு ரூ. 20 வீதம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதி வரிவிதிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரத்தை நிறுவும் நடவடிக்கையை விரைந்து முடிக்க மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ள உயர்நீதிமன்றம் அதுவரை தற்போதைய முறை தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
Summary
The Tamil Nadu government has announced that state-of-the-art reverse vending machines will be installed at TASMAC shops to collect empty liquor bottles.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







