
யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல்: மு.வீரபாண்டியன் கண்டனம்
யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தொடர்பாக...

மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்
யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இந்த கட்டணம் வசூல் செய்யும் முறையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அக்டோபர் 15 முதல் ரூ.2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வர்த்தகம் சார்ந்த யுபிஐ பரிவர்தனைகளுக்கு 2 விழுக்காடு வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும், சாதாரண நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் எப்பொழுதும் போல இலவசமாக வழங்கப்படும் என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.
இது அதிர்ச்சி அளிக்கிறது. வர்த்தகர்களுக்கு மட்டுமே இக் கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் கூட, ரயில்வே, தொலை தொடர்பு, பெட்ரோல் பங்க், காப்பீட்டு பிரிமியம், மின்சாரம், தண்ணீர் பயன்பாடு போன்றவற்றிற்கான கட்டணங்களுக்கு, அக்கட்டணம் ரூ. 2000-க்கு மேல் இருந்தால், அதற்கு ரூபாய் 5 நிலையான கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த கட்டண வசூல் பொதுமக்களை நேரடியாக கடுமையாக பாதிக்கும்.
வர்த்தகத்திற்கு யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்தை நடைமுறை படுத்தினால், அந்தக் கட்டணச் செலவும், பொருட்களின் மீதே ஏற்றப்படும். அதனால் விலைவாசி உயர்வு ஏற்படும்.
யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிப்பது, இந்த சேவையை வழங்கிவரும் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்குமே, நிதி மூலதனத்திற்குமே சாதகமானதாகும். அவற்றின் லாப வேட்கைக்கு இரை போடுவதாகவே அமையும்.
மத்திய பாஜக அரசு இதுபோன்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதும், சாதாரண மக்களுக்கு எதிராக செயல்படுவதும் கடுமையான கண்டனத்திற்குரியது.
எனவே, உடனடியாக யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டுமென மத்திய பாஜக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
Summary
CPI demands Union BJP government immediately cancel UPI fee collection
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






