
விநாயகர் சிலைகளைக் கரைக்க தற்காலிக குட்டைகள் அமைப்பது குறித்து ஆய்வு! தமிழக அரசு
விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கு தற்காலிக குட்டைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தகவல்...

கோப்புப் படம் - ENS
விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கு தற்காலிக குட்டைகள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, நீர் நிலைகளில் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஹரிஹரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் சிலைகளைக் கரைக்க அனுமதிக்க இயலாது என்று தெரிவித்திருந்தது.
அடுத்தாண்டு முதல் நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்கப்படமாட்டாது என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, அடுத்தாண்டு முதல் இயற்கை நீர்நிலைகளில், சிலைகள் கரைக்கப்படமாட்டாது என்றும், இதுசம்பந்தமாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள், விதிகள் பின்பற்றப்படும் என உறுதியளித்து தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. சிலைகள் கரைப்தற்கு, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலை கண்டிப்பாக பெற வேண்டும் என்றும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி தினேஷ்குமார் சிங், நிபுணத்துவ உறுப்பினர் சுஜித்குமார் பாஜ்பாய் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதில், இனிவரும் ஆண்டுகளில், ஆறு மாதங்களுக்கு முன்பே அரசு, விநாயகர் சிலைகள் கரைப்பதற்குரிய திட்டமிடல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களை அடையாளம் காண்பது, அந்த இடங்களின் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்வது, தற்காலிக குட்டைகள் அமைப்பது, சிலைகளின் எண்ணிக்கை மற்றும் உயரங்களை முறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகள், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகள் பின்பற்றப்படும் என்றும், சிலைகளைக் கரைப்பதற்கு தற்காலிக குட்டைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆய்வு செய்யும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த பிரமாணப்பத்திரத்துக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம் விசாரணையை அக்டோபர் 13-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
Summary
TN Govt reviews the creation of temporary ponds for the immersion of Vinayagar idols
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







