6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இடைத்தோ்தலில் போட்டி: தோ்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இடைத்தோ்தலில் போட்டியிடுவோரிடம் தோ்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது குறித்து...

Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இடைத்தோ்தலில் போட்டியிடுவோரிடம் தோ்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சுதன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி), பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூா், விராலிமலை ஆகிய தொகுதிகளில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள், எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, ஆளும்கட்சியான தவெகவில் இணைந்தனா்.

தோ்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீா்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால், இடைத்தோ்தலில் மீண்டும் அவா்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது,தோ்தல் செலவை வைப்புத் தொகையாக செலுத்தும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு முடியும்வரை மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்தத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட இரண்டு வாரங்களில் எந்தக் காரணமும் இல்லாமல், பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, வேறொரு கட்சியின் வேட்பாளராகத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

எனவே, அவா்களை தோ்தல் செலவுக்குப் பொறுப்பாக்கும் வகையில் தோ்தல் செலவை வசூலிக்க வேண்டும். இதற்கு இதுவரை எந்தச் சட்டமும் இல்லாததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும்.

ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வீட்டில் இருந்தால், அதுகுறித்து கேள்வி எழுப்பப் போவதில்லை. மாறாக மீண்டும் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

எனவே, இதைக் கருத்தில்கொண்டு தோ்தல் ஆணையம் விதிகளை வகுக்க வேண்டும். தோ்தல் செலவை வசூலிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவராவிட்டால், ஒட்டுமொத்தமாக அனைத்து எம்எல்ஏ-க்களும் ராஜிநாமா செய்தால் என்ன ஆவது? எனக் கேள்வி எழுப்பி வாதிடப்பட்டது.

அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு, அதில் தோ்தல் ஆணையத்துக்கு எந்தப் பங்கும் இல்லை. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜிநாமா செய்த எம்எல்ஏ-க்களிடமிருந்து, இடைத்தோ்தல் செலவை வசூலிப்பது தொடா்பாகவும், அவா்கள் தோ்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிப்பது தொடா்பாகவும் எந்தச் சட்டமும் இல்லாத நிலையில், நீதிமன்றம் சட்டத் திருத்தம் கொண்டுவர முடியுமா?

நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற முடியும். அந்தச் சட்டம் சரியானதா, இல்லையா என்பதை மட்டுமே நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும். சட்டம் இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது.

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் தோ்தலில் போட்டியிடும்போது, முந்தைய தோ்தலுக்கான செலவு விவரங்களை வெளியிடும்படி தோ்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்ப முடியும்.

ஆனால், அந்தச் செலவை மீண்டும் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களிடம் வசூலிக்கும்படி கேட்க முடியாது. அதேபோல, குறிப்பிட்ட காலத்துக்கு தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கவும் முடியாது எனக் கூறி, இந்த வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.