
எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் போட்டி: நீதிமன்றமா சட்டத்திருத்தம் கொண்டுவர முடியும்? நீதிபதிகள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் செலவை ராஜிநாமா எம்எல்ஏக்களிடம் வசூலிக்கக் கோரிய வழக்கில் விசாரணை...

சென்னை உயர்நீதிமன்றம் - ENS
எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பாக நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டுவர முடியுமா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், எந்த காரணமும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு வாரங்களில் ராஜிநாமா செய்துவிட்டு, வேறொரு கட்சியில் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதனால், அவர்களை தேர்தல் செலவுக்கு பொறுப்பாக்கும் வகையில் தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும். அதற்கு எந்த சட்டமும் இல்லாததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும்.
ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வீட்டில் இருந்தால், அதைப்பற்றி கேள்வி எழுப்பப் போவதில்லை. மாறாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதால், இதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் விதிகளை வகுக்க வேண்டும். தேர்தல் செலவை வசூலிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவராவிட்டால், ஒட்டுமொத்தமாக அனைத்து எம்எம்ஏக்கள் ராஜிநாமா செய்தால் என்ன ஆவது என வாதிடப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தேர்தல் ஆணையத்துக்கு எந்த பங்கும் இல்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என சுட்டிக்காட்டப்பட்டது.
விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ராஜிநாமா செய்த எம்எல்ஏக்களிடமிருந்து தேர்தல் செலவை வசூலிப்பது தொடர்பாகவும், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது தொடர்பாகவும் எந்த சட்டமும் இல்லாத நிலையில், நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டுவர முடியுமா? நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற முடியும். அந்த சட்டம் சரியானாதா, இல்லையா என்பதை மட்டுமே நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும்.
சட்டம் இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது. எம்எல்ஏ ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடும்போது, முந்தைய தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட விவரங்களை வெளியிடும்படி தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பலாம். ஆனால், அந்த செலவை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வசூலிக்கும்படி கேட்க முடியாது. அதேபோல, குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
Summary
MLAs resigning and contesting again: Can the court bring about a legislative amendment: Madras HC
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







