
மின்வாரிய அலுவலகத்தின் அருகே ஊழியர்கள் போராட்டம்: முதல்வர் சந்திக்காதது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி!
மின்வாரிய அலுவலகத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களை முதல்வர் விஜய் சந்திக்காமல் சென்றது ஏன்? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

டிடிவி தினகரன் - முதல்வர் விஜய் - கோப்புப்படம்
மின்வாரிய அலுவலகத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களை முதல்வர் விஜய் சந்திக்காமல் சென்றது ஏன்? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில், முதல்வர் விஜய் இன்று (செப். 23) காலை திடீரென சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ரீல்ஸ் வீடியோவுக்காக மக்களைப் பார்த்துக் கை அசைத்த முதலமைச்சர், மின்வாரிய அலுவலகத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களைச் சந்திக்காமல் சென்றது ஏன்?
தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்பாக, மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஜோசப் விஜய்க்கு, அதே மின்வாரியத் தலைமை அலுவலகத்தின் அருகே, காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குமாறும் போராடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எழுப்பும் குரல் கேட்கவில்லையா?
மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அடிப்படைப் பிரச்னைகளுக்கு கவனம் செலுத்தாமல், "நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ்" என ரீல்ஸ் விடியோக்களுக்காக மட்டுமே முதல்வர் ஜோசப் விஜய் தனது மனம் போன போக்கில் சம்பிரதாயத்திற்கென ஆட்சியை நடத்தி வருவதாக அரசு ஊழியர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த சில நாட்களாக, காற்று நின்றுவிட்டது, தண்ணீர் வற்றிவிட்டது, சோலார் மின்சாரத்தைச் சேமிக்க இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என அறிவியல் விஞ்ஞானிகளே வியக்கும் அளவிற்கு எரிசக்தித் துறை அமைச்சரும் சக அமைச்சர்களும் ஆளுக்கொரு கருத்தைத் தெரிவித்து வந்த நிலையில், பணியாளர்களின் பற்றாக்குறையும், பராமரிப்புப் பணிகள் நடைபெறாததும் தான் மின்வெட்டுக்கான காரணம் என்ற புதுக் கதையை எரிசக்தித் துறை அமைச்சர் இன்று வடிவமைத்துள்ளார்.
மின்சாரத் துறைக்குப் பொறுப்பு வகித்துக்கொண்டு, அந்தத் துறையைத் தவிர்த்து மற்ற அனைத்து பிரச்னைகளிலும் மூக்கை நுழைப்பதையும், அரைகுறை அறிவோடு "எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்" போல் சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் எரிசக்தித் துறை அமைச்சர், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல, தமிழகமே இருளில் மூழ்கிய பின்புதான் மின்வெட்டுக்கான காரணத்தையே கண்டறிந்திருக்கிறாரா?
எனவே, இனியும் புதுப்புதுக் கதைகளைச் சொல்லியும், தங்களது நிர்வாகத் திறமையின்மையை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் மீது பழிபோட்டு மக்களைத் திசைதிருப்புவதையும் நிறுத்திவிட்டு, மின்வெட்டுக்கான உண்மையான காரணங்களை அறிந்து, அதனை நிவர்த்தி செய்து, தடையற்ற மின்சாரம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என மின்சார வாரியத்தையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
Summary
AMMK General Secretary T.T.V. Dhinakaran has questioned why Chief Minister Vijay left without meeting the employees who were protesting near the Electricity Board office.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





