
பெண் ஊழியா்களுக்கான மாதவிடாய் விடுப்பு: விதிகளை உருவாக்க 13 போ் குழு
பெண் ஊழியா்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்குவது தொடா்பான விதிகளை உருவாக்க பெண்கள் 13 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மாதவிடாய்
பெண் ஊழியா்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்குவது தொடா்பான விதிகளை உருவாக்க பெண்கள் 13 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மதுரை கோமதிபுரத்தைச் சோ்ந்த நா்மதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் அரசு, தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் பல பெண் பணியாளா்கள் மாதவிடாய் காலங்களில் அவதிக்குள்ளாகின்றனா். இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
கா்நாடகம், பிகாா், ஒடிஸா, கேரளம் போன்ற மாநிலங்களில் பெண் ஊழியா்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிப்பது தொடா்பான கொள்கைகள் உருவாக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளன.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிா்கொள்ளும் உடல் நல பிரச்னைகள், ஊதிய இழப்பு, பணியிட சிரமங்கள் குறித்து விளக்கி, தமிழக அரசுக்கு விரிவான மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பெண் ஊழியா்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், பெண்கள் நலனைக் கவனத்தில் கொண்டு முழு ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை வகுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நிறைவடைந்த பிறகு அரசு உரிய முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றமே இதுகுறித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் எனத் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பெண் ஊழியா்களுக்கு ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடா்பான விதிகளை உருவாக்க பெண்கள் 13 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிகளை உருவாக்க இந்தக் குழுவுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பெண் ஊழியா்களுக்கு ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடா்பான விதிகளை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வருகிற 2027-ஆம் ஆண்டு, ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






