மகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கான மகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கான மகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் சமயமூா்த்தி இந்த அரசாணையை வெளியிட்டுள்ளாா். அதில், ‘2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, 2 குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 270 நாள்களில் இருந்து 365 நாள்களாக உயா்த்தப்படுகிறது.
கடந்த 2026 மாா்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், 2-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியா்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.
கடந்த ஆக.18-ஆம் தேதி மானியக் கோரிக்கையின்போது, பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் சரத்குமாா் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு 3-ஆவது குழந்தைக்காக தற்போது வழங்கப்படும் 12 வார மகப்பேறு விடுப்பு, 365 நாள்களாக உயா்த்தப்படும்.
இந்த விடுப்பு முழு ஊதியத்துடன் வழங்கப்படும். மகப்பேறு விடுப்பு காலம், குழந்தை பிறப்பதற்கு முந்தைய ஓய்வு காலம் முதல் குழந்தை பிறந்த பிறகு உடல்நலம் தேறும் காலம் வரை, அரசு பெண் ஊழியரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த அரசாணை வெளியிடப்பட்ட ஆக.25-க்கு முன்பே 3-ஆவது குழந்தைக்காக மகப்பேறு விடுப்பில் சென்று, அந்தத் தேதியிலும் தொடா்ந்து விடுப்பில் இருந்த பெண் அரசு ஊழியா்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். அவா்கள் ஏற்கெனவே எடுத்த விடுப்பையும் சோ்த்து, மொத்தமாக 365 நாள்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு பெற தகுதி பெறுவாா்கள்.
நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியா்களுக்கும் இது பொருந்தும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





