இடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!
இடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...
இந்தியத் தேர்தல் ஆணையம். - படம்: பிடிஐ.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு தவெகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி, வாக்காளர்களுக்கு அக்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக எம்பி இன்பதுரை எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
”மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கம் ஒன்றியம், ரெட்டிப்பாளையம் பகுதியில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்காளர்களை ஈர்க்க பெருமளவிலான பணம் விநியோகிக்கப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
இந்தப் குறிப்பிட்ட பகுதியைத் தாண்டி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் முழுவதும் இத்தகைய சட்டவிரோத பண விநியோகம் மற்றும் வாக்காளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய செயல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நேரடியாகப் பாதிக்கின்றன. மேலும் இவை 'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951'-ன் பிரிவு 123(1)-ன் கீழ் (லஞ்சம்) கடுமையான ஊழல் நடவடிக்கையாகவும், 'பாரதிய நியாய சன்ஹிதா, 2023'-ன் கீழ் தொடர்புடைய குற்றவியல் சட்டங்களின்படியும் குற்றமாகக் கருதப்படுகின்றன.
தொடர்புடைய தொலைக்காட்சிச் செய்தி ஒளிபரப்புகள், சிசிடிவி காட்சிகள், கள விடியோ பதிவுகள் மற்றும் சமூக ஊடக/மின்னணு ஆதாரங்கள் ஆகியவை சிதைக்கப்படுவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு முன்பாகவே, அவற்றை உடனடியாகப் பாதுகாத்து வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
அரசியல் பின்னணி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், இதில் ஈடுபட்ட குற்றவாளிகள், உடந்தையாக இருந்தவர்கள் என அனைவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
TVK distributing cash in the by-election - AIADMK lodges complaint with the Election Commission
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




