
திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!
திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன் வழங்கியது பற்றி..

சென்னை உயர்நீதிமன்றம் - file photo
திரைப்பட தயாரிப்புக்காக அட்வான்ஸ் வாங்கிய விவகாரத்தில் நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகரும், இயக்குநருமான ராஜ்கிரண் (இயற்பெயர் முகைதீன் அப்துல் காதர்) தாக்கல் செய்துள்ள மனுவில், எனது இயற்பெயர் முகைதீன் அப்துல் காதர். என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடித்த பிறகு எனது பெயர் திரைத்துறையில் ராஜ்கிரண் என்று மாறியது. திரைத்துறையில் பல ஆண்டுகளாக நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறேன்.
இந்த நிலையில், கடந்த 2022 ஏப்ரல் 19ம் தேதி மீஞ்சூரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் சரவணன் என்பவர் என்னை அணுகி திரைப்படம் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவித்து எனக்கு ரூ. 50 ஆயிரம் முன்பணமாகத் தந்தார்.
ஆனால், படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கவில்லை. ஒரு கட்டத்தில் படத்தின் தயாரிப்புக்காகத் தந்த ரூ.50 லட்சத்தைத் திரும்பத்தருமாறு என்னிடம் கேட்டார். அதற்கு கால அவகாசம் கோரினேன். இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை அணுகிய சரவணன் என்மீது புகார் அளித்தார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ரூ.10 லட்சத்தை சரவணனுக்கு 2025 ஆகஸ்ட்டில் கொடுத்தேன்.
இந்த நிலையில், நான் அவரிடம் ரூ. 40 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக என் மீது மீஞ்சூர் போலீசில் கடந்த 2025 செப்டம்பரில் சரவணன் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் வழக்குப்பதிவு செய்யக் கோரி பொன்னேரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது பொன்னேரி நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே படம் தயாரிப்பு தொடர்பாக 2022ல் ஒப்பந்தம் நடந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திரைப்பட தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தம் மற்றும் சிவில் வழக்கு. இதற்கு கிரிமினல் சாயம் பூசப்பட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே தொழில் ரீதியான ஒப்பந்த பிரச்னை. உரிய ஆவணங்களின் அடிப்படையில்தான் இது முடிவுக்கு வரும்.
தமிழக திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர். எங்கும் தப்பி விட மாட்டேன். எனவே, இந்த வழக்கின் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி என். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ராஜ்கிரண் 15 நாள்களுக்குச் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






