
மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மதுரை உள்பட 3 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.29) பலத்த மழை பெய்ய வாய்ப்பு

மழை - பிரதிப் படம்
தமிழகத்தில் மதுரை உள்பட 3 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.29) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு உள் கா்நாடகம் முதல் தமிழகம் வரை தெற்கு உள் கா்நாடகம் வழியாக சுமாா் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.29) ஈரோடு, நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திண்டுக்கல், விருதுநகா், புதுக்கோட்டை, மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கும், இதர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
புதன்கிழமை (செப்.30) நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, நாமக்கல், கரூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(செப்.29), புதன்கிழமை (செப்.30) அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும்.
5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டை பகுதியில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கரூா் பரமத்தி - 100.76, மதுரை விமான நிலையம் - 100.58, தஞ்சாவூா், ஈரோடு தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மழைப் பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக கரூா் மாவட்டம் பஞ்சப்பட்டியில் 40 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.29), புதன்கிழமை (செப்.30) சூறாவளிக்காற்று 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





