
போக்சோ வீரமணி வழக்கு: புகாரளிக்க, தகவல் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு!
போக்சோ வீரமணி வழக்கில் புகாரளிக்க, தகவல் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு...

வீரமணி - கோப்புப்படம்
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் பொதுமக்கள் புகார் அளிக்க, தகவல் தெரிவிக்க 9345319676 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் மூலமாகவும் இந்த எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் புகார் மற்றும் தகவல் தெரிவித்தவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் அவரது உதவியாளரான சாந்தியும் அவரது கணவரும், மற்றொரு (முன்னாள்) உதவியாளரான கணேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரிடமும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீரமணி மீது இதுவரை 15-க்கும் மேற்பட்ட சிறுமிகள் புகார் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரமணி வீட்டிற்குச் சென்று வந்த தன் மகள் தற்கொலை செய்துகொண்டதாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுமியின் தாயார் ஒருவர் இன்று புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க, பொதுமக்கள் இந்த வழக்கு தொடர்பாக தகவல் தெரிவிக்க ஒரு பிரத்யேக மொபைல் எண்ணை சிறப்பு புலனாய்வு குழு அறிவித்துள்ளது.
இதுபற்றி வெளியான அறிக்கையில்,
"காவல்துறை இயக்குநர் / படைத்தலைவர், தமிழ்நாடு - உத்தரவின்பேரில், ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மற்றும் பிற எதிரிகளுக்கு எதிரான வழக்கு மற்றும் அது தொடர்பாக பதிவாகியுள்ள போக்சோ வழக்குகளில் விசாரணை (Special Investigation Team - SIT) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது, சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று, (28.09.2026) பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஆஜராகி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி வழக்குகள் தொடர்பாக புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் இவ்வழக்கிற்கு தொடர்புடைய தகவல்கள், உண்மைகள், ஆவணங்கள் அல்லது பிற முக்கிய விவரங்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், அவற்றை சம்மந்தப்பட்ட நபர்கள் 9345319676 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகவோ, Whatsapp மூலமாகவோ அத்தகவல்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், பெறப்படும் அனைத்து தகவல்களும் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
Summary
POCSO Veeramani Case: Mobile number for lodging complaints and providing information
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



