
நெல்லையில் பட்டப்பகலில் இரட்டை கொலை! 4 பேருக்குக் கத்திக்குத்து!
நெல்லை மாநகரை அதிரவைத்த இரட்டை கொலை பற்றி..

விசாரணை நடத்தும் போலீஸார்
நெல்லை மாநகரில் இடப் பிரச்னை தொடர்பான தகராறில் பட்டப்பகலில் நடைபெற்ற இரட்டை கொலைபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையில் நான்கு பேருக்குக் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
நெல்லை டவுன் மணிப்புரத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு நிக்கோலஸ் ராஜரத்தினம் (78), டால்டன் (76) உள்ளிட்ட 4 மகன்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் குவைத்தில் பணிபுரிந்து விட்டு ஊருக்கு திரும்பிய நிலையில், தற்போது மணிப்புரத்தில் ஒரே காம்பவுண்டில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவருக்கு சொந்தமான குடும்ப கோயில் உள்ளது. செந்தில்குமாருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். செந்தில்குமார் சென்னையில் வெல்டராகவும், ரஞ்சிதா டவுனில் உள்ள ஜவுளி நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.
செந்தில் குமாருக்குச் சொந்தமான கோயில் அருகே உள்ள இடத்தில் கார் நிறுத்துவது தொடர்பாக டால்டன் குடும்பத்தினருக்கும், செந்தில் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த செந்தில்குமார் இன்று காலை இருசக்கர வாகனத்தில் அந்த வழியாகச் சென்றபோது, கோவில் முன்பு வைத்து டால்டனின் மகன் நரேனுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் கைகலப்பாக மாறியதைப் பார்த்த நிக்கோலஸ் ராஜரத்தினம், சண்டையைத் தடுக்க அங்கு ஓடி வந்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிக்கோலஸ் ராஜரத்தினத்தை சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். இதனைப் பார்த்து டால்டன் வீட்டிலிருந்து ஓடி வந்து செந்தில்குமாரை தடுக்க முயன்றபோது, அவரையும் செந்தில்குமார் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நரேன் சித்தப்பா மகன் நவீன் இதனைப் பார்த்த ஆத்திரத்தில் செந்தில்குமாரிடம் இருந்த கத்தியை பிடுங்க முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் நவீன் மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே டால்டன் பரிதாபமாக உயிரிழந்தார். நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிக்கோலஸ் ராஜரத்தினமும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த நவீன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தங்கதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையாளர் சேகர் சஞ்சய் தேஷ்முக் மற்றும் கிழக்கு மாநகர துணை காவல் ஆணையாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லை மாநகரில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





