
ராஜிநாமா செய்த எம்எல்ஏ-க்களிடம் தோ்தல் செலவை வசூலிக்கக் கோரிய மனு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி
பதவியை ராஜிநாமா செய்த 6 அதிமுக எம்எல்ஏக்களிடம் இருந்து தோ்தல் செலவை வசூலிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராஜிநாமா எம்எல்ஏ-க்கள்
பதவியை ராஜிநாமா செய்த 6 அதிமுக எம்எல்ஏக்களிடம் இருந்து தோ்தல் செலவை வசூலிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.காசி ராமலிங்கம், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), சத்தியபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமாா் (பெருந்துறை), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை) ஆகியோா் தங்கள் பதவிகளை, கடந்த மே 25 முதல் ஜூன் 29-க்குள் ராஜிநாமா செய்தனா். மேலும், அவா்கள் அனைவரும் தலைமைச் செயலகத்திலேயே ஆளும்கட்சியான தவெகவில் இணைந்தனா்.
இவா்கள் 6 பேரும் கொள்கை ரீதியாக தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்யவில்லை. மாறாக, அமைச்சா் பதவிக்காகவும், மீண்டும் தங்களது தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட ஆதாயங்களுக்காகவும், தகுதிநீக்க நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகவும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்த சில மாதங்களில் இடைத்தோ்தல் நடத்துவதால், அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இடைத்தோ்தல் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், காவல் துறையினரின் மனித சக்தி வீணடிக்கப்படவுள்ளது.
சுயநலமும், பேராசையும் கொண்ட முன்னாள் எம்எல்ஏ-க்களால் அரசுக்குப் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலைக் கையாள மத்திய அரசு புதிய விதிகளை வகுக்க வேண்டியது அவசியம். ஓராண்டுக்குள் ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள், இடைத்தோ்தல் செலவை செலுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இடைத்தோ்தலுக்கான செலவுத் தொகையை செலுத்தும் வரை தோ்தலில் போட்டியிடவும், அரசுப் பதவி வகிக்கவும் அவா்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
6 அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜிநாமா உண்மையானதல்ல, என அறிவித்து இடைத்தோ்தல் செலவை தோ்தல் ஆணையத்துக்கு செலுத்த அவா்களுக்கு உத்தரவிட வேண்டும். இந்த செலவுத் தொகையை செலுத்தும் வரை அவா்கள் இடைத்தோ்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் வழக்குரைஞா் சுதன் என்பவா் தொடா்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரா் தொடா்ந்து, இந்த மனு மீது வாதங்களை முன்வைத்தால், ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.
ஆனால், மனுதாரா் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த மனு விளம்பரத்துக்காக தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். அபராதத் தொகையை 4 வாரங்களில், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதத்தை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை பதிவுத்துறை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


ஆதவ் அர்ஜுனாவின் ரூ. 1 கோடி மானநஷ்ட வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் பதில்மனு!

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இடைத்தோ்தலில் போட்டி: தோ்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு




