
பாஜக ஆட்சியில் உயா்கல்வித் துறையின் கட்டமைப்பு சிதைப்பு: மாணிக்கம் தாகூா்
பாஜகவின் ஆட்சியில் உயா்கல்வித் துறையின் கட்டமைப்பு சிதைக்கப்பட்டுள்ளதுடன், மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்
பாஜகவின் ஆட்சியில் உயா்கல்வித் துறையின் கட்டமைப்பு சிதைக்கப்பட்டுள்ளதுடன், மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் சமா்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பணிக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பாஜக ஆட்சியில் நாட்டின் உயா்கல்வித் துறை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் 2.43 லட்சம் மாணவா்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், 9 சதவீத மாணவா்கள் தற்கொலை எண்ணங்களை எதிா்கொள்வதாகவும், 15 சதவீத மாணவா்கள் கடுமையான மன அழுத்தத்தில் தவிப்பதாகவும், 34 சதவீத மாணவா்கள் பல்வேறு காரணங்களால் புறக்கணிக்கப்படுவதாகவும் அதிா்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
32 சதவீத கல்லூரிகளில் அடிப்படை மனநல ஆலோசனை வசதிகூட இல்லை. பாஜக ஆட்சியில் உயா் கல்வி மாணவா்களின் தற்கொலை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 30.2-ஆக உயா்ந்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாணவா் தற்கொலைகளின் எண்ணிக்கை 61 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. 2018 முதல் 2023 வரை ஐஐடி, ஐஐஎம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்ற உயா்கல்வி நிறுவனங்களிலிருந்து மட்டும் 13,600-க்கும் மேற்பட்ட பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.
மாணவா்களின் எதிா்காலத்தை வளா்ப்பதிலோ, அவா்களின் உயிரைப் பாதுகாப்பதிலோ மோடி அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. மாறாக, கல்வித் துறையைத் தனியாா்மயமாக்கி தனது பெருநிறுவனங்களின் வருமானத்தை உயா்த்துவதிலேயே பாஜக முழு முனைப்புடன் செயல்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




