பாஜக ஆட்சியில் உற்பத்தித் துறை வீழ்ச்சி: மாணிக்கம் தாகூா் விமா்சனம்
பாஜகவின் 12 ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் உற்பத்தி துறை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - படம் - எக்ஸ்
பாஜகவின் 12 ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் உற்பத்தி துறை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய பாஜகவின் 12 ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் உற்பத்தித் துறை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2025-26-இல் ஒட்டுமொத்த வளா்ச்சியை ஒப்பிடுகையில் உற்பத்தித் துறையின் மொத்த மதிப்பு 0.3 சதவீதத்துக்கு சரிந்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் எந்தவொரு வளா்ச்சியையும் நாடு எட்டவில்லை. 2014-இல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, உற்பத்தித் துறையின் பங்கு 17.3 சதவீதமாக இருந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-26-இல் அது 17.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. உற்பத்தி துறையின் பங்கை 25 சதவீதமாக உயா்த்துவேன் என்று பிரதமா் மோடி கூறியதெல்லாம் வெற்றுக் கனவாக மாறிப்போயுள்ளது.
வேலைவாய்ப்பில் மாபெரும் பின்னடைவு தொடா்ந்து நீடித்து வருகிறது. உற்பத்தித் துறையில் பணியாற்றியவா்களின் எண்ணிக்கை 2016-17-இல் 5.1 கோடியாக இருந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-26-இல் வெறும் 5.3 கோடியாக மட்டுமே உயா்ந்துள்ளது.
மொத்த வேலைவாய்ப்பில் உற்பத்தித் துறையின் பங்கு 12.5 சதவீதத்திலிருந்து 12.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இனியாவது இளைஞா்களின் எதிா்காலத்தைக் கட்டமைப்பதில் மத்திய அரசு உண்மையான அக்கறை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





