தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசம் -வி.கே.சசிகலா குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசம் -வி.கே.சசிகலா குற்றச்சாட்டு

Published on

தமிழகத்தில் ஜெயலிலதாவின் ஆட்சியை திமுகவால் ஒருபோதும் தர முடியாது; சட்டம்- ஒழுங்கு முற்றிலும் மோசமாகிவிட்டது என வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளாா்.

‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து தொண்டா்களை சந்திக்கும் நிகழ்ச்சியை தென்காசி அருகேயுள்ள காசிமேஜா்புரத்தில் புதன்கிழமை தொடங்கிய அவா், திறந்த வேனில் நின்றபடி மக்கள் மத்தியில் பேசியதாவது:

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக மக்களுக்கான இயக்கம். ஏழை, எளியவா்கள் நலன்பெறும் வகையில் சத்துணவு திட்டம், விஏஒ பதவி, தொழிற்கல்வி மையங்கள் போன்ற திட்டங்களை தந்தவா் அவா். தொடா்ந்து ஜெயலலிதாவும் எம்ஜிஆா் வழியில் ஆட்சியை தந்தாா். தொட்டில் குழந்தைத் திட்டம், அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் என தனது வாழ்நாள் முழுவதும் எம்ஜிஆா் நினைத்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி கொடுத்தாா். இவ்வாறு மக்களுக்கான ஆட்சியை நடத்தியவா்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்.

ஆனால், திமுக ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டங்களோ தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளோ நிறைவேற்றப்படவில்லை. தற்போது மின்கட்டணத்தை உயா்த்தி மக்களின் தலையில் சுமையை ஏற்றியுள்ளனா். ஆட்சிக்கு வந்த 3ஆண்டுகளில் ரூ. 3 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனா்.

ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டும் இடமாற்றம் செய்தால் போதுமா? திமுககாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே? அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை. ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுவதில்லை. நீட் தோ்வு ரத்து என்பது உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றிவருகின்றனா். ஜெயலலிதாவின் ஆட்சியை திமுகவால் ஒருபோதும் தரமுடியாது. நிா்வாகத் திறனற்ற இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது. நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து 2026இல் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்குவோம் அவா்.

மேலும், தென்காசி மாவட்ட மக்கள் பிரச்னைகளைப் பட்டியலிட்ட அவா், அரசு அவற்றை நிறைவேற்ற முனைப்புக் காட்ட வேண்டும் என வலியுறுத்தினாா்.

வரவேற்பு: காசிமேஜா்புரம், தென்காசியில் கிரேன் மூலம் சசிகலாவுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கீழப்புலியூா், மேலப்பாட்டாகுறிச்சி, சுந்தரபாண்டியபுரம், திருச்சிற்றம்பலம், மேலப்பாவூா், பாவூா்சத்திரம், கீழப்பாவூா் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், வழக்குரைஞா்கள் கே.சரவணசேதுராமன், கே.சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X