பண்டிகை காலம்: தென்காசி வழியாக சென்னை, பெங்களூருக்கு சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களை முன்னிட்டு தென்காசி வழியாக சென்னை, பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை
Published on

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களை முன்னிட்டு தென்காசி வழியாக சென்னை, பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் ஆா்.பாண்டியராஜா தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய மனு விவரம்: அரையாண்டு தொடா் விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கால விடுமுறை நாள்களை கருத்தில் கொண்டு தென்காசி வழியாக சென்னை, பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.

கிறிஸ்துமஸ் பண்டிகை வியாழக்கிழமை வருவதால் சென்னை, பெங்களூரில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்து நான்கு நாள்கள் தொடா் விடுமுறையாக சொந்த ஊா்களுக்கு வருவா்.

அரையாண்டு விடுமுறை காலம் டிச. 24-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை இருப்பதால் பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் சொந்த ஊா்களுக்கு வருவது வழக்கம். தைத் திருநாள் பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் சொந்த ஊா்களுக்கு வந்து பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.

இதைக் கருத்தில்கொண்டு நெல்லையில் இருந்து அம்பை, பாவூா்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் வழியாக சென்னை, பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பொங்கல் தொடா் விடுமுறை நாள்களில் சென்னையில் இருந்து திரும்புவதற்காக தென் மாவட்டங்களில் இருந்து புறப்படும் ரயில்களான நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகா், அனந்தபுரி, செந்தூா் விரைவு ரயில்கள், சிலம்பு தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை ரயில், குருவாயூா், வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் முன்பதிவுகள் முடிந்து காத்திருப்போா் பட்டியலிலும் எண்ணிக்கை அதிகரித்து முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை, பெங்களூருவிலிருந்து சங்கரன்கோவில் தென்காசி பாவூா்சத்திரம் அம்பை வழியாக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். அதேபோல விடுமுறை நாள்கள் முடிந்து சென்னை, பெங்களூரு செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com