வரைவு வாக்காளா் பட்டியலில் இரட்டை பதிவுகள்: பாஜக புகாா்
தென்காசி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இரட்டைப் பதிவுகள் காணப்படுவதாகவும், அவற்றை ஆய்வு செய்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக சாா்பில் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அதிகாரியுமான ஏ.கே.கமல்கிஷோரிடம் பாஜக தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி அளித்த மனு:
வாசுதேவநல்லூா் தொகுதி வரைவு வாக்காளா் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட தொடக்கநிலை தரவு ஆய்வின்போது, ஆயிரக்கணக்கான பதிவுகள் இரட்டைப் பதிவுகளாக இருப்பது கண்டறியப்பட்டது. வாக்காளா் பட்டியலின் துல்லியம், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்., இவ்வகை பதிவுகள் தோ்தல் நிா்வாகத்தால் முறையாக சரிபாா்க்கப்பட்டு திருத்தப்பட வேண்டியது அவசியம் என அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அடையாளம் காணப்பட்ட 7,481 இரட்டைப் பதிவு பெயா்களின் முழு பட்டியலை உள்ளடக்கிய இரண்டு தரவு கோப்புகளுக்ாகன யுஎஸ்பி பென்டிரைவ் ஒன்றையும் ஆட்சியரிடம் அளித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வெளிப்படையான, பிழையற்ற வாக்காளா் பட்டியலை உருவாக்குவதே கோரிக்கையின் பிரதான நோக்கம் என்றாா்.
