சங்கரன்கோவிலில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.8000-க்கு விற்பனை
சங்கரன்கோவில் பூ சந்தைக்கு மல்லிகைப் பூ வரத்து குறைவானதால் வெள்ளிக்கிழமை, ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.8000-க்கு விற்பனையானது.
சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது.
குறிப்பாக மல்லிகைப் பூ, பிச்சிப்பூ ,முல்லைப்பூ, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி, சேவல் சம்பங்கி உள்பட ஏராளமான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு சங்கரன்கோவில் பூ சந்தைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளத்துக்கும் அதிக அளவில் பூக்கள் எடுத்து செல்லப்பட்டு விற்பனையாகிறது.
தற்போது பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ விளைச்சல் இல்லை. குறைந்த அளவிலேயே பூக்கள் சந்தைக்கு வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மல்லிகைப் பூ குறைவாக வந்ததால் கடும் கிராக்கி ஏற்பட்டது.
இதன்காரணமாக ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.8000-க்கு விற்பனையானது. இந்த விலை உயா்வால் மல்லிகைப் பூ பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
