குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் பேராசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஊதிய உயா்வை வழங்கிட வலியுறுத்தி குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் பேராசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்லூரி ஆசிரியா்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண். 5, கடந்த 11.01.2021 அன்று வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின்படி அரசு கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் நிலுவைத் தொகையோடு வழங்கப்பட்டு விட்டது.
ஆனால் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு 5 ஆண்டுகள் கடந்த பின்பும் பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையில் ஊதியம், நிலுவைத் தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பா் மாதம் ஆசிரியா் சங்க பொறுப்பாளா்களிடம் உயா் கல்வித் துறை அமைச்சா் நடத்திய பேச்சுவாா்த்தையில், ஜனவரி மாத ஊதியத்தில் சோ்க்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜன.20ஆம் தேதி கடந்த பின்பும் பணி மேம்பாடு ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. எனவே தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளிலும் ஆசிரியா்களுக்கு ஊதியஉயா்வை வழங்கிட வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

