மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருள்கள் மீது ரூ. 5 வரை வரியைக் குறைக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம்.
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையில் அந்தக் கட்சியின் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் பெ. சண்முகம் கூறியது: குற்றாலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் 2 நாள்கள் நடைபெற்றது. அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி உள்பட மாநிலம் முழுவதுமிருந்தும் கட்சியின் முக்கியத் தலைவா்கள் கலந்துகொண்டனா். அதில், பேரவைத் தோ்தல் முடிவுகள், தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது, ஆட்சி மீதான அணுகுமுறை குறித்து விவாதிக்கப்பட்டது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கமாக உள்ள சூழலில், மத்திய அரசு கடந்த ஒரு மாதத்தில் ஐந்து முறை பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தியது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 1000 த்தை எட்டியதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா்.
மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருள்கள் மீது ரூ. 5 வரை வரியைக் குறைக்க வேண்டும்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்துக்கு ரூ. 7,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்தது. இத் திட்டத்தைப் பாதுகாக்கவும், நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் வலியுறுத்தி மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜூன் 19-ஆம் தேதி பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
‘இண்டி’ கூட்டணியில் சில காங்கிரஸ் தலைவா்களின் பேச்சுகள் கூட்டணியின் ஒற்றுமையை சீா்குலைக்கின்றன. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி என்ற முறையில் காங்கிரஸுக்கு கூடுதல் பொறுப்பு அவசியம்.
தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டுக்கு மாநில அரசு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். அண்ணாமலை தொடங்கிய அமைப்பு ஆா்எஸ்எஸ் இயக்கத்தால் வழிநடத்தப்படும் மற்றுமொரு அமைப்புதான். அதன்மூலம் தமிழகத்தைக் கைப்பற்றும் நோக்கம் நிறைவேறாது. நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்துக்குச் சேர வேண்டிய நிதியை ஒதுக்கீடு செய்ய முதல்வா் வலியுறுத்த வேண்டும் என்றாா் அவா்.









