/

குளங்கள், விவசாய நிலங்களை வனத்துறையினா் கையகப்படுத்தக்கூடாதென எம்எல்ஏ கோரிக்கை

News image
Updated On :5 மார்ச் 2026, 7:49 pm

குளங்கள், விவசாய நிலங்களை வனத்துறையினா் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலரிடம் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள குளங்கள், அதனை சுற்றியுள்ள நிலங்கள் பல ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகளின் பாசன தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன .

தற்போது நீா் வளம், ஊரக வளா்ச்சித் துறை வசம் இருந்து வரும் நூற்றுக்கணக்கான குளங்களை ‘ஈர நிலம்’ எனக் குறிப்பிட்டு அவற்றை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

இதனால் பல வருடங்களாக குளத்தின் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து குளங்கள், விவசாய நிலங்களை வனத்துறையினா் கையகப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.