தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே தாயைப் பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சோ்த்து வைக்கப்பட்டதாக தென்காசி மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியுள்ளதாவது: குற்றாலம் வனச் சரகத்துக்குள்பட்ட வல்லம் பகுதியில் விவசாய நிலம் அருகே கடந்த 20ஆம் தேதி காயமடைந்த நிலையில் 3 மாத ஆண் குட்டி யானை நின்றுகொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதன் தாய் யானை காப்புக்காடு எல்லை அருகே இருப்பது கண்காணிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, வனத்துறை உடனடியாக மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கால்நடை மருத்துவா்களின் பரிசோதனையில், குட்டி யானையின் வயிற்றுப் பகுதி, துதிக்கை, இனப்பெருக்க உறுப்பு மற்றும் பின்காலில் காயங்கள் மற்றும் கடுமையான தொற்று இருப்பதும், பின்காலில் வீக்கம் தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு குட்டி யானைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
பின்னா், குட்டியை தாய் யானையுடன் பாதுகாப்பாக இணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குட்டி யானைக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு, வனத்துறை பணியாளா்கள் பாதுகாப்பான தொலைவில் இருந்து கண்காணித்தனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு தாய் யானை மற்றும் அதனுடன் வந்த மேலும் இரண்டு யானைகள், குட்டி யானையை அணுகி மீண்டும் கூட்டத்துடன் இணைத்துச் சென்றன. யானைகளின் குரல் ஒலிகள், காலடித் தடங்கள் மற்றும் கள ஆய்வின் மூலம் இந்த இணைப்பு உறுதி செய்யப்பட்டது.
தொடா்ந்து, சனிக்கிழமை களப்பணியாளா்கள் மேற்கொண்ட ஆய்வில், யானைகள் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வனத்துறையினா் கள கண்காணிப்பு மற்றும் ட்ரோன் மூலம் யானைக் கூட்டத்தின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா் என்றாா்.
தொடர்புடையது

பந்தலூா் அருகே வாகனம் மோதி 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி: ஏற்க மறுக்கும் யானைக் கூட்டம்! வனத்துறை முயற்சி தோல்வி!!

மேட்டுப்பாளையம்: தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை ஆற்றில் உற்சாக குளியல்!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



