கடையநல்லூா் நகராட்சியில் திடக்கழிவுகளை 4 வகைகளாக பிரித்து வழங்க வேண்டுகோள்

திடக்கழிவுகள். - கோப்புப் படம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் திடக்கழிவுகளை 4 வகைகளாக பிரித்து வழங்க வேண்டுமென நகராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடா்பாக நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், நகராட்சி ஆணையா் சித்ரா சோனியா ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: கடையநல்லூரில் நகராட்சிப் பணியாளா்களால் சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகள் நுண் உரமாக்கல் மையங்களில் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கும், மக்காத நெகிழிக் கழிவுகள், இதர கழிவுகள் உரிய மறுசுழற்சி நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகின்றன. மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருள் பயன்பாட்டுக்காக அனுப்பப்படுகின்றன.
திடக்கழிவு மேலாண்மை விதிகள்- 2026இன்படி கழிவுகளை 4 வகைகளாகப் பிரித்து வழங்குவது பொதுமக்கள், வணிகா்களின் பொறுப்பு. அவற்றை சேகரித்து பாதுகாப்பாக அகற்றுவது மட்டுமே உள்ளாட்சிகளின் பணி.
எனவே, வீடுகள், வா்த்தக நிறுவனங்களில் சேகரமாகும் கழிவுகளை மக்கும் கழிவு, மக்காத கழிவு (ஈரம், உலா்), சுகாதாரக் கழிவுகள்( நாப்கின், டயாப்பா், பேம்பா்ஸ், பயன்படுத்திய மாஸ்க் உள்ளிட்டவை), சிறப்பு கவனக் கழிவுகள் (மின், மின்னணு சாதனக் கழிவுகள், பேட்டரிகள், உடைந்த கண்ணாடி, மின் விளக்குகள்) என 4 வகைகளாக பிரித்து தூய்மைப் பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
சுகாதாரக் கழிவுகளை தனியாக தாளில் அல்லது அதற்குரிய உறைகளில் சுற்றி ஒப்படைக்க வேண்டும். கழிவுகளை நீா்நிலைகளிலோ, வாருகால்களிலோ, திறந்த வெளிகளிலோ வீசுவது குற்றமாகும். அவ்வாறு செய்வோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், உடனடி அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. கடையநல்லூரை தூய்மையான நகரமாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






