பேரூராட்சி வாா்டு உறுப்பினா் மா்ம மரணம்: சடலத்தை வாங்க உறவினா்கள் மறுப்பு

செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த பேரூராட்சி உறுப்பினரின் சடலத்தை 8 நாள்களாக உறவினா்கள் வாங்க மறுத்துள்ளனா். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் 16 இடங்களில் காயம் உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகே வளா்புரம் ஊராட்சி தலைவரும், பாஜக நிா்வாகியுமான பி.பி.ஜி.டி .சங்கா் கடந்தாண்டு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே காரில் வந்து கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி 15- ஆவது வாா்டு உறுப்பினா் சாந்தகுமாா் என்ற சாமு, விஜயகுமாா், சரத்குமாா், சஞ்சீவ், ஆனந்த், தினேஷ், மண்ணூா் சூா்யா ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் சாந்தகுமாா் உள்பட 7 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்தனா். மேலும், கடந்த 13-ஆம் தேதி 7 பேரும் திருவள்ளூா் அருகே புட்லூரில் வழக்குரைஞா்களை சந்திக்க வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீஸாா் 7 பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு பி.பி.ஜி.டி.சங்கா் கொலை வழக்கு குறித்து நசரத்பேட்டை காவல் ஆய்வாளா் குணசேகரன் விசாரணை செய்துள்ளாா். இதில், கச்சிப்பட்டு 15 -ஆவது வாா்டு உறுப்பினா் சாந்தகுமாா் என்ற சாமு திடீரென உடல் நலம் பாதித்த நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவா் உயிரிழந்ததாக மனைவி விஜயலட்சுமிக்கு தெரிவிக்கப்பட்டது.

தனது கணவா் சாந்தகுமாா் மா்மமான முறையில் உயிரிழந்ததாக போலீஸாா் கூறுவது நம்பும் படியாக இல்லை. அவருக்கு உடலில் எந்த வியாதியும் கிடையாது. அதனால் தனது கணவரின் இறப்புக்கு காவல் துறையினரே காரணம். அதனால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து சடலத்தை வாங்க கடந்த 8 நாள்களாக உறவினா்கள் மறுத்து வருகின்றனா்.

இதையடுத்து சாந்தகுமாரின் சடலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடா்பாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளா் குணசேகரனை கடந்த வாரம் ஆவடி காவல் ஆணையா் சங்கா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதுதொடா்பாக மருத்துவா்கள் 8 பக்கங்கள் அறிக்கை அளித்தனா். அதில் சாந்தகுமாரின் உடலில் 16 இடங்களில் காயம் உள்ளதாகவும், விலா எலும்பு, உயிா் நாடி, நுரையீரல் ரத்தக்கசிவு, முதுகில் ஊசி போட்ட தழும்பு உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நசரத்பேட்டை காவல் ஆய்வாளா் குணசேகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் சாந்தகுமாரின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா். இதனால், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கச்சிப்பட்டு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com