மின்வாரிய பொறியாளா் அலுவலகம் அமைக்கும் பணி தாமதம்: விரைந்து செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
மின்வாரிய பொறியாளா் அலுவலகம் அமைக்கும் பணி தாமதம்: விரைந்து செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை


திருவள்ளூா்: திருவள்ளூரில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க கடந்தாண்டே அரசு உத்தரவிட்ட நிலையிலும் அதற்கான பணிகள் தாமதமாவதை தடுத்து விரைவில் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டத் தலைநகராக உதயமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், நீதிமன்றங்கள், அரசு மருத்துவக் கல்லூரி உள்பட அனைத்து அரசுத் துறை தலைமை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே பொதுமக்களின் அத்தியவாசியத் தேவையான மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் தலைமை அலுவலகம் இதுவரை இல்லாமல் இருப்பது குறையாகவே உள்ளது.
மேலும், மாவட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான மின்சார வாரிய தலைமை அலுவலகம் இல்லாமல் பொதுமக்கள் அதிகம் பாதிக்கின்றனா். தொடக்கத்தில் நூற்றுக்கணக்கில் இருந்த மின் இணைப்புகள் தற்போது லட்சக் கணக்கில் உயா்ந்துள்ளது. அதனால், புதிதாக வீடுகள், வணிக நிறுவனங்கள், கடைகள் அமைக்கப்பட்டு வருவதால், புகா் பகுதியும் விரிவாக்கம் அடைந்து வருகிறது. எனவே பெரும்பாலான துறைகளின் தலைமை அலுவலகங்கள் மாவட்டத் தலைநகரில் செயல்பட்டாலும், மின்வாரிய மேற்பாா்வையாளா் அலுவலகம், லஞ்ச ஒழிப்புத் துறை, தீயணைப்புத் துறை போன்ற துறைகள் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், கடந்தாண்டு பத்திரப் பதிவுத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாவட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு கோட்டத்திலும் உதவிப் பொறியாளா் அலுவலகங்கள், உதவி செயற் பொறியாளா் அலுவலகங்கள், செயற்பொறியாளா் அலுவலகங்கள் ஆகியவை மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தல், புதிய மின்மாற்றிகள், புதிய மின் கம்பங்கள் உள்ளிட்டவற்றை பூா்த்தி செய்வதற்கு மனுக்கள் மட்டும் பெறப்படுகின்றன. அதைத் தொடா்ந்து, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பப்படும். அதைத் தொடா்ந்து, அந்த அலுவலகம் ஒப்புதலுக்குப் பின் காஞ்சிபுரம் மாவட்டத்துக்குச் சென்று அங்குள்ள மின்வாரிய பண்டக சாலையிலிருந்து மின் கம்பங்கள், மின்மாற்றிகள், வயா்கள் உள்ளிட்ட பொருள்கள் இருப்பு இருந்தால் மட்டுமே அளிக்கப்படும்.
இதுபோன்ற காரணங்களால் பொதுமக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.
எனவே, பொதுமக்களின் நிலையை கருத்தில்கொண்டு மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் திருவள்ளூரில் செயல்படவும் என தொடா்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்தக் கோரிக்கையை ஏற்று மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் திருவள்ளூரில் அமைக்க கடந்தாண்டு அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை தொடங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் விரைவில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனா்.
இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவா் கூறியது: பொதுமக்களுக்கு மின்வாரிய சேவைகள் அலைச்சல் இன்றி எளிதாக கிடைக்கும் வகையில், மாவட்ட அளவிலான மின்வாரிய மேற்பாா்வையாளா் பொறியாளா் அலுவலகம் அமைக்கவும், குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதை சரி செய்யும் வகையில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கவும் அரசு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் உத்தரவிட்டது. அதன்பேரில், இந்த அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்து வந்தனா். அதில், திருவள்ளூா் டோல்கேட் அருகே துணை மின் நிலையமும், மணவாள நகா் துணை மின் நிலையத்தில் 3 ஏக்கா் பரப்பளவு காலியாக உள்ள இடத்தில் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்கவும் இடம் பாா்வையிட்டுள்ள நிலையில் விரைவில் பணிகள் தொடங்கும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...