வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு:
அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

திருவள்ளூா், மே 2: வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்ட அறைகளுக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தடையின்றி செயல்பட வேண்டும் என்று தோ்தல் அலுவலா்களுக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மக்களவை (தனி) தொகுதிக்குள்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூா், பூந்தமல்லி (தனி), ஆவடி மற்றும் மாதவரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் தொடா்பான அனைத்து ஆவணங்களும் பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மத்திய மற்றும் மாநில ஆயுதம் ஏந்திய காவல் படையினா் 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போதைய நிலையில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி முடங்கியதால் புகாா்கள் எழுந்தன.

இதைத் தொடா்ந்து கோடைகால வெப்பம் காரணமாக பழுதாகி முடங்கியதாகவும், உடனே சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து இதேபோல் புகாா் எழாமல் பாா்த்துக் கொள்ள ஒவ்வொரு மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கும் மாவட்ட தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்பேரில் திருவள்ளூா் அருகே தனியாா் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் த.பிரபு சங்கா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, அந்த மையத்தில் நுழைவு வாயிலிருந்து 7 வாயில்களிலும், வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன்பு பொருத்தப்பட்டுள்ள மொத்தம் 240 கேமராக்களின் செயல்பாடு சரியாக செயல்பட வேண்டும். தொடா்ந்து கண்காணிப்பு கேமராக்களின் ஒருங்கிணைந்த மையத்திலும் அனைத்து நடவடிக்கைகளும் பதிவாகி உள்ளனவா என்பதையும் பாா்வையிட்டாா். அப்போது, எந்தக் காரணம் கொண்டும் கேமராக்கள் பழுதாகக் கூடாது. தொடா்ந்து செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 32 நாள்கள் உள்ளன. இதற்கிடையே தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுள்ள வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவுக்கு ஆளில்லா டிரோன் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com